காரிருள்
காரிருள்
-------------
காரிருள் எனும் காரிகை நான்
ஒளியுடன் பிறந்த இரட்டைப்பிறவி
ஒளியும் நானும் சேர்ந்து சுழன்றால்
வருவது உலகில் பகலும் இரவும்
வாழ்க்கைக்கு ஜீவன் ஒளி என்பர்
ஏனெனில் ஒளி இல்லாமல் உயிர் இல்லை
நீதியும் நேர்மையும் இருட்டினில் மறையும்
அதனால் தீயவள் என்றே என்னை அழைப்பர்
தீமையில் நன்மை உண்டு
நச்சு பாம்பின் தலையில் இரத்தினம் போல்
இரவாய் வரும் நான் இல்லை எனில்
ஒளிரும் பகலே நீண்டு இருக்கும்
தண்ணொளி தரும் நிலவு வாராது
மஞ்சத்தில் இன்பமாய் மனைவி மடியில்
தலை சாய்த்து துன்பம் மறந்து
அவள் காதில் காதல் கதைகள் பல சொல்லி
வெள்ளி முளைக்கும் வரை -தூக்கத்தில்
தன்னை மறக்க இரவு வாராதே -ஆக
இருளாம் என்னை தீயவள் என்று தூற்றாதே
நாளெலாம் ஒளியில் உழைக்கும் பாட்டாளி
நாடுவது இருளாம் இரவின் தாலாட்டே
தண்ணொளி நிலவு வருவது இரவினில் தான்
அல்லி மலர்வதும் இரவினில் தான்
இரவைத் தொடர்வது பகலென்றால்
பகலைதொடர்வது இரவல்லவா
இருளும் ஒளியும் இயற்கையின் நியதி
ஒன்றிலாமால் மற்றோன்று இல்லை
இதில் உயர்வேது தாழ்வேது சொல்லமுடியுமா
இருட்டினில் நீதி மறையும் என்றால்
அதை மறைப்பவன் ஈனமான மனிதனே
அதற்கு இருள் நான் என் செய்வேன்
இருள் இருந்தால் தான் ஒளி புலனாகும்
இருட்டிற்கு ஒளி ஒளிக்கு இருட்டு
ஆக எமக்கு இரட்டைப் பிறவி
அந்த இறைவனே தந்தான்
இறைவன் தந்த அத்தனைக்கும்
அர்த்தம் உண்டு என்பதறி .