நந்தலாலா

என்னடா இன்னும் ஆளையே காணோமேன்னு பார்த்துகிட்டு இருந்தேன் வந்துட்டியா ...சரி இன்னைக்கு என்ன உங்க வீட்டுல விசேஷமா ? பாத்திரம் , பண்டமெல்லமாம் உருட்டுற சத்தம் கேக்குது சமையல்கட்டு கூட மணக்குதே...

நந்தலாலா எங்க அண்ணனுக்கு கல்யாணமடி உனக்குத் தெரியாதோ ….நாள் நெருங்கிட்டே இருக்கே ...வீடெல்லாம் சுத்தமா வச்சு , பழையதெல்லாமும் அப்புறப்படுத்திட்டு , கீழ சிவனேன்னு கெடக்குற பொருளையெல்லாம் பரண்மேல போட்டுட்டு இருக்கோமுடி....சமையல் இன்னைக்கு தான் மணக்குதோ..நீ ஏண்டி சொல்லமாட்ட.... தினமும் கைமணக்க உன் சமையல தான சாப்டுறாங்க வீட்டுல..உனக்கு வாய் வர வர கூடிட்டே போகுதுடி...எவன்கிட்டயாவது உன்ன சீக்கிரம் பிடிச்சு குடுக்கச் சொல்லி தான் நானும் உங்க வீட்டுப் பக்கம் வரப்போலாம் பாடிட்டு போறேன் யார் கேக்குறா....

எவன்கிட்டயாவது பிடிச்சு குடுக்கறதுக்கு நான் என்ன மாடாடி ?! கழுத ….....

க்கிகிக் ...நான் கழுத இல்ல பார்த்தாலே தெரிஞ்சு போயிடும்டி ..நீ மாடு மாதிரிதானே இருக்க.....

அடிக் கழுத....என்ன பார்த்தா மாடு மாதிரி இருக்கோ ...என்கிட்டே பேசாத போ...

நீதான் என்கிட்டே இப்போ தேடி வந்து பேசுற...

ஆமா அதான உனக்கு லேசா போயிடுச்சு....

எனக்குத் தெரியுமடி ….நீ யார்கிட்ட போயி பேசுவ மனசுவிட்டு....அதோட நீ உளர்றத யாரு கேட்பா...க்கிக்...

சரிதான் உன் வாய அடக்குறது ரொம்ப கஷ்டம் ...ஆமா இன்னைக்கு என்ன ரொம்ப நேரமா சத்தமே இல்ல ….என்ன பெருசா வேலை …

நந்து ...உனக்கு தெரியுமா ? வழக்கமா வீட்டுக்கு வரப்போலாம் அக்கா என் கூடவே இருப்பா...நானும் அவளும் எப்படின்னு சொல்லியாக வேணுமா …...கல்யாணம் ஆகிப் போனதுலர்ந்து கூட நல்லாத்தான் இருந்தா...ஒழுங்கா சமர்த்தா அவ கூடவே இருக்க அவ்ளோ ஆசையா இருக்கும்.......இன்னைக்கு வந்தவ கையோட ஏதோ புத்தகத்தோட வந்துட்டா …...எனக்கு என்னனு அவகிட்ட போனா கண்டுக்கவே இல்ல....படிக்குறா ...படிக்குறா ...முகத்த இப்படியும் அப்படியும் கூட திருப்பாம.....நானும் என்னென்னமோ செஞ்சு பார்த்தேன் பிரயோஜனமே இல்லடி....அந்தக் கண்ணாடிக்காரன பார்த்தாலே அவ்வளோ கோபம் வருதுடி.....கெழவன் ........

ஓ அதான் சத்தம் கிண்டலும் இங்க திரும்புதோ....ஆமா யாரு அந்தக் கண்ணாடிக்காரன் ...கெழவன் …?

எதையோ விளக்கிக் கழுவ அம்மா கூப்பிட்டான்னு அக்கா அந்த புத்தகத்த குப்புற படுக்கவச்சுட்டு போனா ...அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடனும்னு திருப்பி புரட்டி புரட்டிப் பார்த்தேன் அப்போதான் அந்தக் கெழவன் மூஞ்சிய பார்த்தேன்.....முன்னாடியே இருந்துச்சுடி....யாரா இருக்கும்டி …..

கழுதன்னு கொஞ்சம் முன்னாடி தான் சொன்னேன்...உனக்கு கற்பூர வாசனை தெரியறது கஷ்டம்.....கெழவன் , கண்ணாடிக்காரன் இதெல்லாம் அடையாளமா வச்சு யாரன்னு சொல்வேன்....

அப்போ இரு ...இந்தா வரேன்.....

யேய் அங்க என்னடி சத்தம் …..லாவண்யா சின்னவ என்னமோ பன்றா பாரு.....

அரக்க பறக்க ஓடி வந்தவளிடம் , நந்து அம்மா, அக்காகிட்ட மாட்டிக்குவேன் ….நான் போயி அந்த புத்தகத்துகிட்ட உட்காரேன் ..திருப்பி காட்டுறேன்.....இங்கருந்து பாக்குறயா....

சரி சரி …. என் நேரம் ….சீக்கிரம் போ ..

************************************************************************************

சில தடுமாற்றங்களுக்கு அப்புறம் அந்த ஆள யாருன்னு நல்லா பளிச்சுன்னு தெரிஞ்சுகிட்டு , போதும் வா வான்னு சைகை காட்டினா நந்தலாலா....

நந்தா பார்த்தயாடி..யாருடி அவன் …..அவன பத்தின புத்தகமா அது........

யேய் அவரு யாருன்னு தெரியுமா பெரிய ஆளு ….நெறையா ரசிகர்கள் உண்டு....அவர் எழுதிட்டுப் போன புத்தகங்கள் அப்படி..புதுசா புதுசா யோசிப்பாருடி....இந்த புத்தகம் அவர பத்திலாம் இல்ல....அது அவரோட
நாவல்....பொன்னியின் செல்வன்ங்கற புத்தகம்டி அது..எங்க சொல்லு பார்ப்போம் ..கழுதைக்கு ஒழுங்கா சொல்லத் தெரியுதா பாக்குறேன்.....

பொன்னி செல்வன் …..பொன்னி செல்வன் ….....

ஹஹ்ஹா அழகா இப்படி சொல்ற வாயி இல்லைனா உன்கிட்ட யாருடி என்ன மாதிரி பைத்தியக்காரி பேசுவா.......

சரிடி என்ன புகழ்ந்தது போதும் யாருடி அவரு ரொம்ப பெரிய ஆளோ....

ஆமா அவ்வளோ பிடிக்குற எழுத்தாளர்...

அவருக்கு பேருல்லாம் இல்லையோ....

கல்கி....

கக்கி ...கக்கி........

ம்ம்ம்ம் ….யேய் சமீபமா ஒரு புத்தகம் படிச்சேன் அவரோடது....

ச்ச நீயும் அந்த ஆளோட ரசிகையாக்கும்.....நான் கெளம்புறேன் ..வீட்டுல வேலை இருக்கு..........

என்ன வேடிக்கை பாக்குற வேலையா......

எனக்கென்னமோ அந்த ஆளப் பிடிக்கவே இல்லடிம்மா......

அப்போ வேற ஏதாவது பேசுவோம்.....வந்து அப்படி ஒரு இடத்துல உட்காரு....

ஒரே இடத்துல தான் உட்கார்ந்துருக்கேன் ரொம்ப நேரமா....கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கறேண்டி.....

ரொம்ப சலிப்பு இந்த வயசுலயே...இன்னைக்கு காலேஜ்ல நான் யுஜி படிச்சப்போ நடந்த ஒரு விஷயம் நியாபகம் வந்துச்சு.....அது எப்பவுமே மறக்காதுடி....

ஓஹோ கதை சொல்ல ஆரம்பிச்சுட்ட போல இருக்கு....சொல்லு சொல்லு.....

இல்லடி கதைல கூட கேள்விப்படாத சுவாரசியம் நிஜத்திலும் நடக்கும்......

இப்போ நீ சொல்லப் போறது எப்படி....

கொஞ்சம் செண்டிமெண்ட்....கொஞ்சம் ஆச்சரியம் இருக்க ஒரு குட்டிக் கதை ….கதைன்னா நிஜமா நடந்ததுடி............

க்கிக் ...........

உத்தரவு ஆரம்பிக்கலாமா ...........?

இவ்வளோ பில்டப் தேவையா.......

ம்ம்ம்...அப்போலாம் முப்பது ரூபா தான் வீட்டுல குடுப்பாங்க காலேஜ் போக....போக வர செலவு இருபது ஆகும்..மிச்சம் பத்து ரூபா இருக்கும் ..காலைல இங்க சாப்ட முடியாதா நேரமாகிடும் ….அதனால அங்க போயி ஏதாவது கான்டீன்ல காலைல சாப்ட அப்புறம் மதியம் ஏதாவது சாக்லேட் வாங்கி சாப்டறதுல மிச்சம் இருக்குற பத்து ரூபா ஈசியா செலவாகிடும்.....

அப்போ ஒரு நாள் என்னமோ நியாபகத்துல பத்து ரூபா மட்டும் எடுத்துட்டு காலேஜ்க்கு போயிட்டேன்....எப்படி அப்படி செஞ்சேன்னு தெரியல.....ஒருவேள எதோ கோவிச்சுகிட்டு அப்படி கவனம் இல்லாம போயிட்டேன் போல...இல்லனா காசு எடுத்துட்டோம்னு நெனச்சுட்டுப் போயிருப்பேன்....

அன்னைக்கு ஒரு பங்க்சன் வேற ...பிரெண்ட்ஸ் கூட உட்கார்ந்திருந்ததால ஜாலியா டைம் போயிட்டு இருந்தது....இதுல இன்னொரு விஷயம் என்னன்னா அன்னைக்கு மதிய சாப்பாடும் எடுத்துட்டுப் போகல …...அரை நாள் தான் இருக்கும் பங்க்சன்னா... இருந்தாலும் நெறைய பேர் எடுத்துட்டு வருவாங்க சாப்டுட்டு போறவங்க ….நான் அப்படி இல்ல...எப்போடா காலேஜ் விடுவாங்க வீட்டுக்குப் போலாம்னு இருப்பேன்.....திடீர்னு ஹால்ப் டே இல்ல புல் டேன்னு சொல்லிட்டாங்க.....அப்படி சொல்லும் போதும் தெரியாது என்கிட்டே வீட்டுக்குப் போறதுக்கும் மதியம் சாப்பிடறதுக்கும் காசு இல்லைன்னு....அன்னைக்கு காலைல காண்டீன் போயிருந்தா கூட தெரிஞ்சுருக்கும் ….என்னமோ ஒரு கருப்பு தினம் ...ஹஹா …

அப்புறம் …..

அப்புறமென்ன பிரெண்ட்ஸ் கூட பேசிட்டே இருந்துட்டேன்....மதியம் நெருங்க ஆரம்பிச்சதா பசி வேற …...புல் டேன்னு வேற சொல்லிடாங்களா சரி காண்டீன் போக ரெடியா காசு எடுத்து வச்சுக்கலாம்னு பேக்ல கைவிட்டு பாக்குறேன் காசே இல்ல....வரப்போ டிக்கெட்க்கு போக அந்த ஒரு பத்து ரூபால மிச்சம் ஒன்னு அம்பது தான் இருந்துச்சு.....அப்பறம் டிக்கெட் தான் தேடி தேடிப் பார்த்ததுல கைய உறுத்திட்டே இருந்துச்சு...அத தூக்கிப் போட்டுட்டு அப்படியே பர்ஸ்ல ஏதாவது வச்சுருக்கோமான்னு அவசரமா திறந்து பார்த்தா அதுல தேடியும் பிரயோஜனம் இல்ல......

அய்யயோ ….இதென்னடி பிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்ன்னு சொல்ற அவங்ககிட்ட கேட்கறதுக்கு என்ன........ரொம்ப கிறுக்கு மாதிரியே பேசுற.....

அத ஏன் கேக்குற ...முதல் நாள்லர்ந்து அபர்ணா கூட சண்ட......முன்கோபம் அப்போலாம் அதிகம்......பட்டுன்னு கோபபட்டு ஏதாவது சொல்லிடுவேன்....தவிர கொஞ்சம் சுயநலவாதி அவ...ஆனா நல்லவ....அவகிட்ட அந்த சுயநலம் எட்டிப் பாக்கறப்போ எனக்கு என்னோட முன்கோபம் ரொம்ப சீக்கிரமா எட்டிப் பார்க்கும்.....சரி அத விடு....அது மாதிரி நெறையா சண்டை போடுவோம் ரெண்டு நாள் தான் பேசாம இருப்போம்......அப்புறம் ஏதாவது ஒரு விசயத்துல அப்படியே சேர்ந்துடுவோம்.....அவளுக்கு என் முன்கோபம் கொஞ்சங்கூட பிடிக்காது.....

ஆமா ..ஆமா ...வெடுக்கு வெடுக்குனு இப்பவும் நீ அப்பபோ பேசுறது எனக்கும் இங்க கேக்குமுடி.....

அதெல்லாம் அப்போ ரொம்ப உண்டு...இப்போ ரொம்ப இல்ல....அத வச்சுகிட்டு என்னத்த சாதிச்சேன்....

யேய் ஏன் நந்து ..உனக்கென்ன.....நல்லா வருவ பாரு......அப்பறம் அன்னைக்கு என்ன நடந்துச்சு.........

ம்ம்ம் இன்னொரு விஷயம் கோபபட்டு சண்ட வந்தா பெரும்பாலும் அவ தான் வந்து பேசுவா....அன்னைக்கு என்னமோ அவ பேசற மாதிரி இல்ல...ரெண்டு நாள் ஆகலையே... ரேவதின்னு ஒருத்தி இருக்கா அவளும் நல்ல பிரெண்ட் …...அவள தான் தேடுனேன்....ஏன்னா அவ தூரத்துல இருந்து வரான்னு தினமும் நூறு ரூபா கொண்டு வருவா.....அவ்வளோ முழுசா செலவு பன்றவ இல்ல.....சரி அவகிட்ட கண்டிப்பா இருக்கும்ன்னு கேட்டுக்க தேடுனா அந்த ஆடிடோரியத்துல அவள கண்டுபிடிக்க முடில.....எல்லாருமே கிளாஸ்ல பிரெண்ட்ஸா தான் இருப்போம் இருந்தாலும் திடீர்னு அந்த கேட்கற உரிமை வரமாட்டேங்குது ...அப்போ அந்த தூரத்து பிரெண்ட் கண்ணுல எப்படியோ பட்டுட்டா …...லேட்டா வந்ததால ஆடிட்டோரியத்து வாசல்ல உட்கார்ந்துருந்துருக்கா போல ...நான் உள்ள தேடிட்டு இருந்தேன்....அப்போ தான் மனசுக்கு ஒரு வழி கிடைச்சா மாதிரி தெம்பு வந்துச்சு....அதுக்கப்புறம் அந்த பங்க்சன்ல கவனமே போகல....அவள அப்பப்போ பார்த்துட்டு இருந்ததுல டைம் போயிடுச்சு...லஞ்ச் போக சொன்னதும் ரொம்ப வேகமா போயி அவள பிடிச்சிடனும்னு நெனச்சுட்டு இருந்த நான் எப்படியோ அந்த கூட்டத்துல எல்லாரையும் லாவகமா கடந்து அவகிட்ட போயிட்டேன்....அவகிட்ட போயி இந்த மாதிரி இன்னைக்கு காசு எடுத்துட்டு வர மறந்துட்டேன் வீட்டுக்குப் போக காசு இல்லன்னு சொன்னதுக்கு அவ சொன்ன பதில் இருக்கே …..

இல்லைன்னு சொல்லிட்டாளா ….....

அதுவா ...அவளுக்கும் அன்னைக்கு காசு தேவைபடுற சூழ்நிலைல தான் இருந்துருக்கா....சரி நான் கேட்டேன்ல , கொஞ்சம் முகம் வாடினத அவ கவனிச்சுருக்கனும் இல்லைனா அவ எனக்கு பெரும்பாலும் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணுவா அந்த மாதிரியாவது நெனச்சு நான் ஹாஸ்டல் பிரெண்ட்ஸ்கிட்ட கேட்க போறேன் எனக்கு ..அப்படியே உனக்கும் கேட்டு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டா....அவ போற பக்கமே பார்த்துட்டு இருந்தேன்.....

என்ன செய்றதுன்னே தெரியல...வேற யோசனையும் வரல....எல்லாரும் வட்ட வட்டமா உட்கார்ந்து சாப்டுட்டு இருக்காங்க.....ஓரளவுக்கு சமயத்துல பசிய தாங்குற ஆள் தான்....அந்த மதியம் என்னமோ உயிரே போற மாதிரி ஒரு வலி …..காலைலயும் சாப்டலன்னு அப்போ தான் தோணுச்சு...ஒரு மரத்து பக்கத்துல்ல சிமென்ட் பெஞ்சு ஒன்னு இருந்தது...அங்க இருந்து பார்த்தா ஹாஸ்டல இருந்து வரவங்க தெரிவாங்க....உட்கார்ந்தா கொஞ்சம் பரவாலன்னு நெனச்சா....அப்புறம் தான் ரொம்ப களைப்பா கால் , கைலாம் பிசையுற மாதிரி வயிறும் பிசைய வலி.....தாகம் தண்ணி வேற இல்ல...........கொண்டு போற சின்ன பாட்டில் சீக்கிரம் தீர்ந்துடும்.....பக்கத்துல ஒரு பிரெண்ட்ஸ் கேங் சாப்டுட்டு இருந்தாங்க....அதுல கொஞ்சம் தெரிஞ்ச முகங்கள் இருந்தது....பிரெண்ட்ஸோட பிரெண்ட்ஸ் ...அப்பப்போ சினேகமா ஒரு புன்னகைய அவங்ககிட்ட பகிர்ந்ததுண்டு அவ்ளோதான்....இப்போ தண்ணி கேட்க தோணுச்சு....கேட்டேன்....கிடைச்சது ..குடிச்சேன்....இன்னும் தூண்டிவிட்ட மாதிரி ஒரு மாதிரி கிறக்கமா இருந்துச்சு....நல்ல வெயில் …..கூடவே நிழல் ...சுத்தி இருக்கவங்கள பார்க்கவே கூடாது அப்படியே பார்த்தா தெரியாம பார்த்தா பரவால.....என்னோட நிலைமைக்கு யாராவது சாப்பிடறத என்னையறியாம அனுபவிச்சுப் பார்த்துட கூடாதுங்கற ஒரு எண்ணம்....அந்த மரத்தடில நான் மட்டும் தான் உட்கார்ந்திருக்கேன்....எல்லாரும் ஏன் இவ தனியா உட்கார்ந்துருக்கா ரொம்ப நேரமா ...சாப்பிடக் கூட போகலன்னு அப்பப்போ சில பேர் பாக்கறத நான் பார்த்தேன்.....கஷ்டமா போயிடுச்சு.....எழுந்து போகலாமான்னு ஒரு எண்ணம்....முடியல , சமாளிக்கலாம்ன்னு காலை ஆட்டிட்டே நடிக்க வேண்டியிருந்துச்சு.....

பக்கத்துல இருக்குற கேங்ல இருந்து ஒருத்தி வாய திறந்தே கேட்டுட்டா ..எவ்ளோ நேரம் தான் அவளும் பொறுமையா இருப்பா.......

ஏன் சாப்டலையா …...

இல்ல பசிக்கல ...(அதே சிநேகமான புன்னகையோட )

ஆனா அவ நம்புன மாதிரி தெரியல...எனக்கு நேரம் போகாதது நரக வேதனையா இருந்துச்சு....நேரம் போறதும் அதே நரக வேதனையா தான் இருந்துச்சு....

கொஞ்ச நேரமா பொறுத்து என்னோட பெஸ்ட் பிரெண்ட் அபர்ணா வந்தா எங்களோட மத்த பிரெண்ட்ஸ் கூட....அவங்க சாப்பிட்டுடு வர்றது தெம்பா படியிலர்ந்து இறங்கி வரப்போவே தெரிஞ்சது....நான் பார்த்துட்டே இருந்தேன்...அவ கொஞ்சம் என்ன தேடின மாதிரி பார்த்துட்டு வந்துட்டு இருந்துருக்கனும்...என்னமோ மாதிரி முகத்த வச்சுட்டு என்ன பார்த்ததும் பாக்காத மாதிரி அவ பக்கத்துல இருக்கற பிரெண்ட்கிட்ட நான் போறேன்னு சொல்லிட்டு ஆடிட்டோரியத்துக்குள்ள போயிட்டு இருந்தா....மனசுல நெனச்சுக்கிட்டேன் அடிப்பாவி என் நிலைமை தெரியாம போற....எனக்கு சிரிப்பு வரும் இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகள்ல...அதுவும் அவ கூட சண்டையாச்சா இன்னும் கொஞ்சம் சிரிச்ச முகமாவே வச்சுகிட்டு பார்த்துட்டே இருந்தேன்....போயிட்டா....அவ தைரியமா என்ன பார்க்க மாட்டா சண்டை போட்டா....

...நந்தலாலான்னு உனக்கு பேரு வச்சது சரியாப் போச்சு …....ஏண்டி கண்ணமா இப்படி கதை சொல்லி அறுக்கற.....

உனக்கு சுவாரசியம் வேணும் …மிச்சக் கதையும் சொல்லிடறேன்...அப்பறம் எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி.....

சொல்லு சொல்லு பார்க்கலாம்........

அபர்ணா போனான்னு சொன்னேன்ல அவ போயிட்டா ...அவள கவனிச்சுட்டே இருந்த எனக்கு என்ன நோக்கி ஒரு ஜீவன் தலைய குனிஞ்சுட்டே வருதுன்னு தெரியாம போயிடுச்சு.....நான் டைம் ஆயிடுச்சேன்னு பதட்டத்துல்ல அமைதியா கீழ பார்த்துட்டு ஹாஸ்டல் பக்கம் பாக்கறதுமா இருந்தேன்.....திடீர்னு நந்து இந்தான்னு என் கைல ஒரு பேப்பர் பொட்டலம் குடுத்தா எங்க பிரெண்ட்ஸ்கள்ல ஒருத்தி …....

என்னது இது …..(வித்யாசமா)

உனக்கு தான் நந்து சாப்டு...

ஏய் எனக்கு வேணாம் ...நீயே சாப்டு.....

நான் உனக்கு தான் வாங்கிட்டு வந்தேன் (அழுத்தமா புன்னகையோட )

(அதே அழுத்தமான புன்னகையோட ) நிஜமா வேண்டாம் எனக்கு பசிக்கல.....

சாப்டு நந்துன்னு(சாப்டுத்தான் ஆகணும்ங்கற தோரணை ) சொல்லிட்டு அவ போக திரும்பும் போது தண்ணி இருக்கான்னு கேட்டா....இல்லன்னு சொன்னேன் (கொஞ்சம் கேவலமா இருந்துச்சு கேட்க)...இந்தான்னு தண்ணியும் குடுத்துட்டுப் போனா.....

எனக்கு ஒண்ணுமே தோணல.....கைல ரெண்டு பஜ்ஜி சூடா இருந்துச்சு சாப்ட்டுட்டு தண்ணியும் குடிச்சு முடிச்சுட்டு நிமிர்றேன் அவ்ளோ நேரம் நான் எதிர் பார்த்துட்டு இருந்தவ வந்தா.....அவ முகத்துல ஏதாவது கண்டுபிடிக்க முடியுமான்னு பார்த்தேன்....தெரில...அதுக்குள்ள மனசு என்னென்னமோ யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு...அவ வேற ஒரு பிரெண்ட்கிட்ட பேசிட்டே வர்றா....நேரா ஆடிட்டோரியம் பக்கமா திரும்பிபோற மாதிரி இருந்துச்சு..நான் அப்படியே உட்கார்ந்துருக்கேன்.....எப்படியோ திரும்பி பார்த்துட்டா...என்ன வர்லயாடின்னு கேட்டா இயல்பா....அப்போ தான் உரைச்சது உள்ள போக டைம் ஆச்சுன்னு...அவ எதும் சொல்லல...உள்ள போயி அவ பக்கத்துல தான் உட்கார்ந்தேன்....கேட்கணுமாச்சே...

மெதுவா பேச்ச ஆரம்பிச்சு விஷயம் எதுன்னு தெரிஞ்சுகிட்டேன்.....அந்த ஹாஸ்டல் பிரெண்ட் சாயங்காலம் காண்டீன் பக்கம் வரச் சொல்லிருக்கா ரெண்டு பேருக்கும் ரூபா எடுத்துட்டு வந்து தர.......ஆனா படபடப்பு தொடர்ந்து இருந்துட்டே இருந்துச்சு.....ஒரு படத்துல ஒரு சின்ன பையன் அவனுக்கு பிடிச்ச ஒருத்தர பார்க்க போறப்போ டைம் பார்த்துட்டே இருப்பான் ...அதுமாதிரி அப்பப்போ அவ தருவாளா கண்டிப்பான்னு கேட்டுட்டே இருந்தேன்....அவளும் நாலைஞ்சு தடவ சொல்லிப் பார்த்தா தருவாடின்னு ..அப்படி சொல்றப்போ அவ இயல்பாவே இருந்தா.........எனக்கு அது கொஞ்சம் உறுத்தலா இருந்தது....அப்பறம் நான் அமைதியா இருக்கறத பார்த்துட்டு என்ன நம்பிக்கை இல்லையான்னு கேட்டுட்டு அடியே நானும் அவள நம்பி தான் இருக்கேன் ...அத நெனச்சயான்னு சொன்னதுதான் தாமதம் சிரிச்சுட்டேன்...சொன்னவிதம் அப்படி.....அப்பாடா இப்பவாது சிரிச்சயேன்னு சொல்லிட்டு பங்க்ஷன் கவனிச்சுட்டு இருந்தா...நானும் கவனிக்க ஆரம்பிச்சுட்டேன்...எங்கயோ மனசுக்குள்ள ஒரு பொறுமல் இருந்துட்டே இருந்துச்சு..... அவ சொன்ன விஷயம் நியாபகம் வர லேசா சிரிப்பு வரும்...

சாயங்காலமும் ஆச்சு...சொன்ன மாதிரியே அவ பிரெண்ட்கிட்ட கேட்ட ரூபா கெடச்சது.....அந்த பிரெண்ட் கூட ரொம்ப இயல்பா இருந்தா....ஆனாலும் அவதிப்படறவனுக்கு தான் வலி தெரியும்.....சரி அப்புறம் என்ன நானும் ரேவதியும் ஜாலியா சிரிச்சு பேசிட்டே கிளம்பிட்டோம்.......

அப்பாடா கதை முடிஞ்சதா …......

முடிஞ்சது ...என்ன ஆளு நீ ..கதைல எதாவது கேட்கனும்னு தோணலையா ….....

உன் கதை போர் டி...

அடிப்பாவி இந்தக் கதைல இருக்க முக்கியமான விசயமே உனக்கு தெரியல....முன்ன சொன்ன மாதிரி கழுதைக்கு கற்பூர வாசனை..........................

அடியே எங்க சொல்லு பார்ப்போம் என்ன பெரிய முக்கியம்னு...ஆமா எதோ ஆச்சரியம்னு வேற சொன்னயே.....சும்மா சொல்லிருக்க...........

எனக்கு ஒருத்தி பஜ்ஜி வாங்கிக் குடுத்தாளே அந்த விஷயம்.....

ஆமா அவ எப்படி வாங்கிக் குடுத்தா...ஒருவேளை உன் பிரெண்ட் அபர்ணா சொல்லி செஞ்சுருப்பாளோ....

இல்ல இல்ல சண்ட போட்டா எங்களுக்குள்ள எதுமே இருக்காது.....மூஞ்சி கூட பாக்க மாட்டோம்..

அப்போ அந்த ரம்யாக்கு உன்ன ஒருவேளை பிடிக்குமோ....

நீ சொல்ற காரணங்களுக்கு அர்த்தமே இல்ல....ஏன்னா அன்னைக்கு அவங்க காண்டீன் பக்கம் சாப்ட போயிட்டாங்க....நான் இருந்தது ஆடிட்டோரியம் முன்னாடி...தவிர அவங்களுக்கு அன்னைக்கு நான் லஞ்ச் கொண்டு வரலைங்கறதும் தெரியாது.....நான் பசில அப்படி சுருங்கி வயிறு வலியோடவும் இருப்பேன்னும் தெரியாது........

ஆமா அப்புறம் எப்படிடி நந்து........கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு......எப்படி யோசிச்சாலும் நீ சொல்றது சரி தான்........

கிட்ட வா ஒரு ரகசியம் …....அன்னைக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்துச்சு..........

(…...............................................)

அய்யயோ ரொம்ப கஷ்டம்டி.....அந்த சூழ்நிலைல அப்படி வேற ஒரு பிரச்சனையா....உண்மையாவே நெனச்சு பார்க்கவே முடில....நானா இருந்தா ….

என்ன நீயா இருந்தா …...

சரி .சரி.......சொல்லு …....

ம்ம்ம் அந்த ரம்யா எனக்கு அப்போ பிரெண்ட்லாம் இல்ல...அபர்ணாக்கு தான் பிரெண்டு......சொல்லப்போனா ரம்யாவ எனக்கு கொஞ்சம் பிடிக்காது...எப்போ பார்த்தாலும் படிச்சுட்டே இருப்பா.....அந்த மூஞ்சில ஒரு மாதிரி திமிர் இருக்கற மாதிரி தெரியும் …...அவளும் என்கிட்டே ஒட்ட மாட்டா.....அப்படிபட்டவ எப்படி அன்னைக்கு எனக்கு அந்த மாதிரி பஜ்ஜியும் வாங்கிட்டு வந்து சாப்பிட்டே ஆகணும்னு தண்ணியும் குடுத்துட்டுப் போனா தெரியல....என்னமோ அவகிட்ட அதுபத்தி கேட்கவும் இல்ல.....ஆனா அவ செஞ்ச அந்த புண்ணியம் இருக்கே எத்தன ஜென்மத்துக்கும் அவளுக்கு காவலா இருக்கும்......நான் பட்ட வேதனை அப்படி சொல்ல முடியாதது......உண்மையாவே அவ குடுத்துட்டுப் போனப்பறம் எல்லாரும் ஆடிட்டோரியம் கிளம்பி போயிட்டே இருந்தாங்க கொஞ்சம் கொஞ்சமா.....சரியான நேரம் தான்....நான் சாப்டும் போது அந்த பக்கம் யாருமே இல்ல...கண்ணீரே வந்துடுச்சு..அவசரமா கண்ணை சரி பண்ணிட்டேன்....எத நெனச்சு அழுகப் பார்த்தேன்னு தெரியாம விம்மலோடயே சாப்ட்டேன்........தொண்டை அடைச்சது....

கொஞ்ச நாளாவே மனசுல இந்த விஷயம் பாரமாவே இருந்துச்சு.........அப்புறம் தான் ரம்யா மேல கொஞ்சம் நல்ல அபிப்ராயம் வந்துச்சு....சில பேர சில சமயங்கள்ல தான் தெரிய வருது.............அப்பவும் அதே மாதிரி படிச்சுட்டே தான் இருப்பா....ஹஹாஹ்....அவ ஏன் அப்படி செஞ்சா எதுக்கு செஞ்சான்னு இப்பவரைக்கும் தெரியாது.....அவளுக்கே தெரியாது...........

நந்தா என்ன இப்படி சொல்ற......அதெப்படிடி அவளுக்கே தெரியாம இருக்கும்........

ஆமா அதையும் கேளு.....ஒரு நாள் அவகிட்ட அந்த பஜ்ஜிக்கு காசு குடுக்க கூப்பிட்டேன்....திரும்பினா....

ரம்யா அன்னைக்கு எனக்கு பஜ்ஜி வாங்கித் தந்ததுக்கு இந்தா காசு , அன்னைக்கு நீ பண்ணுனதுக்கு காசு குடுக்கறது கேவலம் தான் அது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமான்னு குடுத்தப்போ..கேட்டாளே ஒரு கேள்வி …. …

ஹேய் நந்து நான் எப்போ வாங்கித் தந்தேன்னுட்டா....நானும் என்னனென்னமோ சொல்லி நியாபகப்படுத்துறேன் இல்லன்னு சிரிக்கற என்ன லூஸ் மாதிரி பாக்குறா....நானும் விட்டுட்டேன்.....எழுந்து அவ பக்கத்துலையே போயி இந்தா இந்த காசு வாங்கியே ஆகணும்னு குடுத்தப்போ அய்யயோ நான் எப்போ அப்படி செஞ்சேன்னு சொல்லிட்டு சிரிக்கறா...அப்படியே இருந்தா கூட காசு வேணாம்னு சொன்னா....நான் குடுத்துட்டு ஓடி வந்துட்டேன் என்னோட இடத்துக்கு......அவ முகத்துல நான் சொன்ன விஷயம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தல.............எப்பவும் போல படிச்சுட்டு இருக்கா.........

சரி நியாபக மறதியா இருக்கப் போகுது........

அப்படி கூட வச்சுக்குவோம்.......புழுங்கிட்டிருக்க வேதனைல கேட்டு கிடைக்குற உதவிய விட கேக்காம தேடி வர்ற உதவி எவ்ளோ பெருசு........ அதுவும் அவ இல்லன்னு சொல்லி சாதிக்கறதும் சிரிக்கறதும் கொஞ்சம் ஆச்சரியமா தான் இருந்துச்சு..........இப்போ சொன்னா கூட சிரிப்பா.....

சரி நந்து விடு......உனக்கு எப்படியோ ஒரு நல்ல பிரெண்ட் கெடச்சுட்டா ….

ஆமா...இப்பவும் எப்பவும் மனசுல இருப்பா..............தொடர்புலையும்........

கீஇகீஇகீய்ன்னு இவ்ளோ நேரம் கதை கேட்டவ பறந்து போயிட்டா....நல்லா பேசுவா வாயாடிக் கிளி..அவ போனதும் சில வரிகள் நியாபகம் வந்துச்சு.....

"கதையில் கற்பனை செய்ய முடியாத அத்தனை அதிசயமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன.ஒரு விசேஷம் என்னவென்றால் , அந்த அதிசய சம்பவங்களைக் குறித்து யாருக்கும் சந்தேகம் உண்டாவதில்லை...”( மாண்டவர் மீண்டும் வருவரோ ?- கல்கி என்ற குறு நாவல்கள் தொகுப்பிலிருந்து )

எழுதியவர் : புலமி (28-Jun-14, 1:07 am)
பார்வை : 298

மேலே