பாவம் அய்யா பெற்றவள்

தவமிருந்து கருவுற்று
நாளும், பொழுதும் அடி வயிற்றை
தடவி மகிழ்ந்து, குட்டி பயல் எட்டி
உதைக்கையில் மெய் மறந்து

பத்தியம் இருந்து, பக்குவமாய்
உண்டு, பத்து மாதம் கருவில்
சுமந்து

பெற்றெடுத்து, அக்கம் பக்கம்
யாரும் வைக்காத பெயர் வேண்டும்
என தேடி, தேடி பெயர் சூட்டி

ஊர் உறவெல்லாம் சொல்லி அனுப்பி
விழா கொண்டாடி, காது குத்தி
கிடா வெட்டி விருந்து படைத்து

என் மழலை அம்மா என்று
அழைக்கையில் உச்சி குளிர்ந்து
அப்பாவை பார் என்று சுட்டி காட்டி

கவிழ்ந்து அவன் படுக்கையில்
கல, கலத்து, படம் பிடித்து

பிடித்து நடக்கையில் கை கொட்டி
சிரித்து, கை பிடித்து நடத்தி

நாள், பார்த்து தேர்ந்தெடுத்து
பசும் நெய் சேர்த்து சோறூட்டி

அட்சரங்கள் முருகன் சந்நிதியில்
எழுத பழக்கி

யாழினும் இனிய அவன் மழலை கேட்டு
நாளின் சோர்வெல்லாம் மறந்து

நான் வளர்த்த எந்தன் மாணிக்கம்
என் உயிரில் நிறைந்த பொக்கிஷம்

அவனை தொலைத்து விட்டேன்....!

கண் மறைவாய் ஒரு நொடி தான்
போன என் மகன், காணாமல் போன
மாயம் இன்று வரை நான் அறியேன்

க்ஷண, க்ஷணமும் நான் பார்க்கின்றேன்
அவன் போன வழி திரும்பி வந்திடுவான்
என்று, என் வாசலை தான்

அனு தினமும் குல தெய்வத்தை
வேண்டுகின்றேன், திருப்பி தந்து
விடு எந்தன் பொக்கிஷத்தை என்னிடமே
என்று

பெற்று உயிருடன் இழப்பது பெரும்
கொடுமை, அந்த பேரிழப்பு என்னவென்று
அனுபவித்து அறிந்தவர்க்கு தான் தெரியும்

பாவம் அய்யா பெற்றவள், கொடும்
துரோகம் அய்யா மக்களை தாயிடமிருந்து
பிரிப்பது

நரகத்திலும் இடமில்லை இது போன்ற
தீய செயல் செய்யும் கயவருக்கு

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (3-Jul-14, 10:08 am)
பார்வை : 101

மேலே