அவள் அப்படித்தான்
இரவு தன் கண்களை நன்றாக திறந்திருந்தது, தன் சிறகுகளைத் திறந்திருந்தது போலவே. சாலையெங்கும் பகலின் சாயல், தன்னை ஒரு இளைப்பாரலாய் அணத்திக் கொண்டிருந்தது. இரவு, எதையோ தேடுவதாகப் படுகிறது. அமரந்தா, தன் இருசக்கர வாகனத்தில், இலைமறை காயாய், விசும்பலைப் பார்வையாக்கி வெறித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தாள். இரவின் தேடலுக்குள் தொலைவது, அவளின் தேடலாக இருக்க வேண்டிய சூழலாய் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது அவளின் ஆழ் மனம். உடல் முழுக்க பூத்திருந்த வியர்வைத் துளிகளில் நள்ளிரவைத் தொடும் வெளிர் காற்று, ஒத்தடம் தந்து பறித்துக் கொண்டிருந்தது அவளின் பகலின் இயந்திரத்தை.....
அவள், வண்டியை இன்னும் வேகமாக்கினாள். காற்றோடு குழல் சொல்லும் குதியாட்டத்தில் நாலரை மணிக்கு எழுந்து விடும், தொண்டையடைக்கும் து(தூ)க்கம், தப்பியோடிக் கொண்டிருந்தது. நீண்டு, பின் சரிந்து, பின் சரியாகி, பின் வளைந்து நெளியும் சாலையில், வெறி கொண்ட சர்ப்பமென, விழி மூடா கோபங்களைத் துப்பிக் கொண்டே சென்றாள்.. சாலையோரக் கடைகளின் தூக்கம் கதவடைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.
பெருமூச்சு விட்டாலும் தேநீர் போட்டு, இட்லி அவித்து, மதியத்திற்கு சாதம் வடித்து, அதற்கு தேவையான சட்னி, சாம்பார், குழம்பு, பொறியல் என டிபன், டிபனாய் அடுக்கி பெரியவனை எழுப்பி, சின்னவளை அதட்டி குளிக்க வைத்து, குளித்து, இஸ்திரி செய்து, கணவனை அனுப்பி விட்டு, மாமனார், மாமியாரை சாப்பிட வைத்து, குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு சரியான நேரத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு, பின் அரக்க பறக்க இரண்டு இட்லிகளை நின்று கொண்டே வயிற்றுக்குள் போட்டு (சிலபோது தேநீரோடு காலைக் கதை முடியும்) வண்டியில் விரைந்து, பின்னால் முன்னால் சரி செய்து கொண்டே அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தும் போது, பத்து நிமிடம் தாமதமாகி இருக்கும். அதற்கென்றே பிரத்யேக சிரிப்பொன்றை வளர்த்துக் கொண்டே மேலாளரின் அறை திறக்கச் செய்யும் அன்றைய வேலை அப்போது தான் தன் பீரங்கி கதவைத் திறக்கும்.
உறக்கத்தின் உச்சியில் சாலையோர வாசிகள், கொசு கடித்தாலும், தூங்கி விடும் வரம் பெற்ற புண்ணியவான்கள். கண்கள் நிறைய கண்டு கொண்டே இன்னும் வேகமாய் வண்டியை ஓட்டினாள் அமரந்தா.....
ஆசுவாசப் படாத அத்தனை உணர்வுகளும் கலங்கிய கண்களை, காட்சியோடு பிழையாக்கி கடக்கச் செய்து கொண்டிருந்தன. ஏனோ அழுகை மட்டும் வரவில்லை. அழுது விடக் கூடாது என்பதிலும் தீவிர சிந்தனையை தேடலாக்கினாள்.. வண்டியின் காதோரங்களில், தன்னை பின்னோக்கி நீட்டிக் கொண்டே, ஒரு பகலின் தீவிரத்தை விழுங்கிய மழைப் பாம்பாய், மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் சுருண்டு கொண்டிருந்தது சாலை. ஆங்காங்கே தப்பித்து வாழும் சில மரங்கள் "போகாதே, போகாதே" என்பது போல தலையாட்டி, உடல் ஆட்டி, உயிராட்டிக் கொண்டிருந்தன. இனம் புரியாத பயத்தை, இடம் பொருள் அறியாமல் தன் மீது யாரோ விதைப்பதாக ஒரு உறுமல், அவளை தப்பிக்கச் சொல்வதாக இருந்தது அமரந்தாவின் வேகம்....
வேகம், வேகம், வேகம்..... அந்த போன், இந்த போன், அந்த பில், இந்த பில்,......
"ஓ ....அந்த விஷயமா..... அது அமரந்தாவுக்கு தெரியும்... "
"அமர், சார் கூப்பிடறார் ... "
"அமரந்தா மேடம் நீங்க தான?"
வைத்த தேநீர், பாலாடை பூத்து, பட்டுப் போன பின், எடுத்து ஒரே மடக்கில் குடித்து விட்டு, நேரம் காலம் தெரியாமல் வழிய, வலிய, வலிய, வழிய, வந்து நிற்கும் சக ஊழியனிடம் ஜாடை காட்டி, கொஞ்சம் இளைப்பாற ஓய்வு அறை செல்கையில், அவனின் நமட்டுச் சிரிப்பு, அவனுக்கு எதுவுமே வராது என்பது போல இருக்கும். அமரந்தாவுக்கு என்னவோ போல் இருக்கும்.
அடித்து பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி இரவு ஏழை நெருங்க நெருங்க......
நெருங்கி வந்து "ஹே......... ஹே........." என்று கத்திப் போகும் இருசக்கர வாகன இளைஞர்களைப் பார்த்து அவளும் "ஹே......" வெனக் கத்தினாள். அவர்களை இன்னும் வேகமாய் விரட்டினாள். அவளின் இதயத் துடிப்பின் வேகம், இன்னும் இன்னும் வேகமாய் பாய்ந்து கொண்டிருந்த குருதியின் நிறத்தில் கரப்பான் பூச்சியின் குருதியை கொட்டி விட்டது போல் சிறகு முளைக்கத் தொடங்கி கோபங்களின் எண்ணமாய் சாலை கடந்தது....
எண்ணம் செயலானாலும், "அது சரியில்லை, இது சரியில்லை" என்று புலம்பும் மாமியார், "இந்த காலத்துக்கு புள்ளைங்க மதிக்கறதே இல்ல" என்று புலம்பும் மாமனார். குழந்தைகளின் வீட்டுப் பாடம், இரவுச் சோறு, அவர்கள் சண்டை இவர்கள் சண்டை, நாத்தனாரின் நகைப் பிரச்சினை, அடுத்த மாத தவணைப் பிரச்சினை என்று யோசித்து ஒரு வழியாக சமாளிப்பதற்கான முடிவெடுத்து பின், பாத்திரம் கழுவி, துணி துவைத்து, அடுக்களை சுத்தம் செய்து, படுக்கையில் வந்து விழும் போது, கை வந்து விழும் கணவன் என்ற கொம்பனாய். ஈடுபாடு இல்லை என்ற முகச் சுளிப்போடு முகம் திருப்பும் கணவனை சமாதானம் செய்யக் கூட வழியின்றி, வலிமையின்றி கண் மூடுகையில் மணி 11 தாண்டியிருக்கும்.
"ஏன் 11 மணிக்கு பொம்பள வெளிய வரக் கூடாது?"-
கேள்விக்கு இடமே இல்லை இங்கு. எல்லாமே பதில்தான். புரிந்தும் புரியாதது போல் புரிந்து கொள்ளும் பதில். அசைவற்ற முகத்தில் அத்து மீறும் கனத்தோடு நின்றாள் அமரந்தா...
"என்ன வழக்கம் போல... கோபமா?"- வேர்த்து பூத்து, வாசல் வந்த ஜீவா.... பிரிந்து கிடந்த தலை முடியை வளைத்து நெளித்து கொண்டை போட்டபடியே கேட்டாள். சிரிக்கவே முடியாத உதடு கன்னிக் கிடந்தது. அவள் உடல் மீது சாராய வாடை..
"வர்றவனுங்க எல்லாருமே குடிச்சிட்டு தான் வர்றானுங்க"- அமரந்தாவின் வெற்றுப் பார்வைக்கு, பொட்டு வைத்து பூ சூடியது ஜீவாவின் விளக்கம்.
"என்ன செய்ய... இது பத்தாவது ஆள். அம்மா கீழ விழுந்து கால உடைச்சுகிச்சு.... காலைல ஒரு ரெண்டாயிரமாவது அனுப்பனும் அதான்" என்றாள் ஜீவா.. அவளின் கண்கள் சிரித்தது, குரூரமாய். அவளின் கண்களில் கண்ணீர் பழைய கதையை பழையதாகவே வடித்துக் கொண்டிருந்தது குரூர சிரிப்பின் மறு அசைவாய்...
11வது ஆள் வீட்டுக்குள் போக, ஜீவாவைத் தடுத்தாள் அமரந்தா....
ஜீவாவின் கேள்விப் பார்வைக்கு அமரந்தாவின் பதில் இப்படி இருந்தது....
"ஜீவா இருடா..... நான் போறேன்"
கவிஜி