பரவைகோள்

அநேகமாக அது கி.மு மற்றும் கி.பி க்கு இடைப்பட்ட காலமாகத் தான் இருக்க வேண்டும்...காலக்கோட்டுக்கு இந்தப் பாதியில் நின்று கொண்டு பார்த்தால் பெரிய ஆராய்ச்சியொன்றும் இனி தேவைப்படாது ....புதிரான கதை ஒன்றும் கிடையாது என்றெல்லாமும் யோசிப்பதற்குள் கிடைக்கிறது விவரம்...

அதுவொரு நெய்தல் வழி பின்தொடரும் கதைப்பாடு..அலைகள் ஓயாத கடற்பரப்பு...கண்ணுக்கெட்டிய வரை உயிர்க்கூட்டமே கிடையாது.பரந்த பரவை வெளி ...அதன் மணற்பாங்கு வெண்ணிறமும் பொன்னிறமும் சம பங்கில் கலந்தது போன்று மிளிர்ந்து கொண்டிருந்தது .பெரும் கூச்சலின்றி ஓடி வரும் அலைகள் அம்மணலோடு நன்றாக நுரைத்து இலகுவாக உள்வாங்குவது வழுவழுப்பான பாறையில் தண்ணீர் பட்டு ஒழுகுவது போல் இருக்கும்...அங்கு ஒரு கருங்கற்களாலான கோவில் ...சிறிய கோவில்... கடற்கரையை ஒட்டி அமைந்த அதன் அழகு எந்த சிற்பியின் கைகளுக்கு முத்தமிட்டதோ..நிஜமாக எத்தனை யுகங்களை கடந்திருக்குமோ ….யுகமென்பதை நூற்றாண்டுகளாகவும் கொள்ளலாம்...சற்றே நிதானித்து நிர்ணயம் செய்வது லாபம் தொடர்ந்து முன்னேற....அக்கோவில் அத்துனை பூர்வ கம்பீரப் பாரம்பரியமுடையது...சுதந்திரமுடையது....ஒரு வானம் , ஒரு பூமி , ஒரு கடலுக்கு அருகில் பாந்தமாய் பந்தமாய் எழுந்திருப்பது....

அக்கோவில் அளந்த கருவறையையும் , அதனையடுத்து நான்கு மணித் தூண்களையும் அதை அடுத்து சிறிது தூரம் நீண்டு இரண்டு படிகளைக் கடந்தாற் போல் ஒரு தரை இறக்கமும் , முடிவில் சதுரமாய் அமைந்த எளிய நுழைவு(மண்டபம் என்று சொல்லவியலாது.அதே கருங்கற்களால் ஆன சதுர வடிவ முகப்புத் தூண்கள்) அமைப்பின் நடுவில் அக்கோவிலுக்கான குவளைய மணியோன்று கைக்கு எட்டும்படியான சராசரி உயரத்தில் அக்கடல் கொண்ட காற்றின் தத்தித் தாவும் ஆசைகளுக்கு இழைந்து கின்கினியாய் ஒலித்துக்கொண்டிருக்கும்....

அதோ ஒரு பெரிய அலை வேகமாய்க் கடலினின்று மடிந்து பதுங்கிக் கொண்டே வருகிறது....கரையை அடைந்ததும் அதன் பாய்ச்சல் இருக்கிறதே , சவால்விடும் கை கட்டை விரலை உயர்த்தி முன் நின்று ஒரு கணத்தில் மறையுமே அப்படி இருந்தது...அந்த சவால் எதற்கும் காலத்தின் கட்டாயத்திற்கும் வாழ்விற்குமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்பதாகக் கூட இருக்கலாம்..

கூட்டிலிருந்து பறக்கும் மணிப் புறாக்களில் ஒன்று தன் இணையுடன் விளையாடிக் களித்து வெளியேறிச் சிறகடிப்பதாய் , ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு இருக்கும் வண்ணப் பொலிவு காற்றோடு கலப்பது போன்ற துள்ளலுடன் கால்கள் இரண்டும் பின்னிக்கொண்டு இரண்டு படிக்கட்டுகளை தாண்டி அணியமாய் அக்கோவில் மணியை அடித்துவிட்டு திரும்பிப் புன்னகைக்கிறாள் கை வளையல்கள் ஒன்றோடொன்று மோதி மின்னலிட ஒலிக்கும் மணிக்கட்டிகளை உதிர்த்துவிட்டு...

யாரவள் கொஞ்சம் வெட்கமும் கனிந்த சிரிப்புமாய் யாரை நோக்குவதாய் உள்ளது...???

இதோ கோவிலின் உள்ளிருந்து காதலாய் திரும்பித் ஒரு பக்கம் தலையைக் கோதிவிட்டு , "எங்க போவ என்னவிட்டுன்னு" கேட்கும் பார்வை சொட்ட , திட்டவட்டமாய் வருகிறான் அந்தக் காதலியின் கள்வன்....

அருகில் வர வர கோவிலை விட்டு வெளியேற ஓடப் பார்க்கிறாள் அவள் அவனோ வேகம் பிடித்துவிட்டான்...இருவரும் அக்கோவிலின் வாசலைக் கடக்கப் போவதில்லை இனி...வழக்கமாய் அமரும் முகப்பிற்கு முன் அமைந்த இரண்டு படிக்கட்டுகளில் மேலே அவளும் கீழே அவனும் உட்கார்ந்தனர்...அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு விளையாட்டு இருக்க வேண்டும்...அந்தக் கள்ளச் சிரிப்பு எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தது... இருவரின் முகங்கள் முழுவதும் அதன் ரேகைகள் படர சாதிமல்லி அரும்புகளின் வாசமாய் அந்த இடம் கமழ்ந்திருந்தது....

மீண்டுமொரு அலை கரை தடவிப் போனது....

இருவரும் ஏதோஏதோ பேசினார்களே தவிர எதுவும் கேட்பதாக இல்லை...அக்குவளைய மணியோ அவ்வப்போது ரீங்காரமிட்டு ஓய்ந்து கொண்டிருந்தது...........அவன் கைகள் அவளது கைகளைப் பற்றிக்கொண்டே இருந்தது...அது கண நேரமும் விலகவில்லை....அதன் நிழல்கள் எதிர் பிம்பங்களாய் விழுந்திருப்பினும் நிஜங்களின் பிரியம் பிரியவில்லை...ஒரு பிணைப்பு அவர்களுக்குள் ஆழமாக பிணைந்து கிடப்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் தீர விளங்குவதாய் இருக்கும் ....யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்கவில்லை அந்தக் காதல் ஓவியங்கள்...கொஞ்சம் நெருங்கித்தான் பார்ப்போமே.....

ஆதிரா நான் சொன்னது சரிதானே...

ம்ஹூம் இல்ல...அப்படி ஒண்ணும் நடக்காது …....

இன்னொரு முறை வாதம் பண்ணலாம்...ஆனா பிடிவாதம் வேண்டாம்..கேட்டுக்கோடா ( அழுத்தமான கொஞ்சலுடன் )….......

அதெப்படிங்க நீங்க சொல்றது சரியா இருக்கும்.......

விளையாட்டு வினையாகும்.........

மறுபடியும் கபடமின்றிச் சிரித்துவிட்டு விக்ரமை பார்த்து , நிஜமா நீங்க சொல்றது சரின்னா நான் இப்பவே செத்துடுவேன்னு சொன்னவள் அவனைவிட்டு விலகி கோவிலை விட்டு வெளியேறி கடற்கரையை நோக்கி பார்த்தவண்ணம் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்..அது அவளது முடிவிற்கான வழியாகவும் இருக்கக்கூடும்........

கண்மணி …...( இந்தக் கண்மணியில் மொத்தக் காதலையும் உருக்கி வைத்திருப்பான் விக்ரம் ...அது அவளுக்கான செல்லப் பெயர்)

என் கூட பேசாதீங்க.......

என்னடா …..இப்படி ஒரு பிடிவாதமும் கோபமும் எதுக்கு …...

நீங்க இந்தக் கோவிலும் நம்மளும் கொஞ்ச நாள்ல இருக்க மாட்டோம்னு சொன்னா அதெப்படிங்க ஏத்துக்குவேன் …...என்னால உங்களைவிட்டு போக முடியாதுங்க.........அதுக்கு இப்பவே தனியா போறேன்னு விலகியவளை , இழுத்தவன் கட்டிக்கொள்ள முற்பட்டபோது அவளது உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.....

அவளின் முன் மண்டியிட்டவன் , என் முன்னாடி நீ போறேன்னு சொல்ற அளவுக்கு என்னப் பிரியற காதல் எப்போலர்ந்து ஆதிரா.......

இல்லைங்க.........

அதற்கு மேல் விக்ரம் அவளைப் பேச விடவில்லை.....அவளின் சுவாசத் தடுமாற்றத்தை தன் நெஞ்சோடு அணைத்து , அவளின் வாசத்தில் இறுகிப் போயிருந்தான்...அவளும் அந்தக் காதலிலும் , ஆத்மார்த்தமாய் கலந்திருந்த ஆண்மை வாசத்திலும் கட்டுண்டு இருந்தாள்...

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் துகள்ச் சிற்பங்களாய் காற்றில் காணாமல் போயினர்...மீண்டும் நினைவிற்கு வந்தபோது அந்த இடம் அந்தி மாலையைக் கடந்து இரவை நெருங்கிக் கொண்டிருந்தது.....அடர்ந்த சிவப்புச் சேலையில் விக்ரமின் கண்மணி மெல்லமாய் அவனை விட்டு விலகிய போது , அவளின் விம்மல்கள் விக்ரமின் வெண்ணிறச் சட்டையில் காலத்தின் கோலங்களை வரைந்திருந்தது......

அவ்விடம் தற்போது இல்லை....எங்கு தேடியும் கிடைக்காது........கடல்கோள் கொண்டு போயிருக்கலாம்...அல்லது , அல்லது விக்ரமும் ஆதிராவும் இப்போது இங்கு எங்கும் இருக்க முடியாத இடத்தில் அதுவும் போயிருக்கலாம்.......

தொலைவில் ஒரு வானவில் கற்பனையைத் தோற்றுவித்து வளைந்துகொண்டிருந்தது.....

மேற்படி நிஜத்தை வெகு நாளாய் நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருக்கும் பாரம் மட்டும் குறைந்தது.....அவள் அவனைக் காண்பதில் மீண்டும் உயிர்பெறலாம் அந்தக் கருங்கற் கோவிலும் அவர்களின் பூர்வ ஜென்ம முடிவும்.............

எழுதியவர் : புலமி (3-Jul-14, 2:59 am)
பார்வை : 166

மேலே