அவள் அப்படித்தான்
"சின்ன வயசுல இருந்தே அவ அப்படித்தான்....தெரியாதா உங்களுக்கு...?"
"இப்படி சொல்லி சொல்லி என் வாய அடைச்சிடு....ம்ம்....தாயும் மகளும் சேர்ந்து என்னமோ செய்யுங்க.....!"
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க....நான் பாத்துக்கிறேன்.....எல்லாம் நல்லபடியா நடக்கும்....."
"சரி...சரி...அந்தப் பையனை புதன்கிழமை வந்து என்னைய பார்க்கச் சொல்லு...அப்புறம்.... ராத்திரி நான் வர்றதுக்கு நேரமாகும்.....என்னைய எதிர்பார்த்துக்கிட்டு இருக்காத....சாப்பிட்டுட்டு படு.."
"சரிங்க.....!"
(அப்பா வெளியில் போனதை மறைந்திருந்து பார்த்துவிட்டு....ஓடி வந்து பின்புறமாக அம்மாவை கட்டிப் பிடித்து.....முத்தமிட்டு )
"ம்மா.....அம்மான்னா அம்மாதான்....."
"கீதா.....அதெல்லாம் இருக்கட்டும்....வர்ற புதன்கிழமை அரவிந்த்..அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வக்கிறதுலதான் இருக்கு கீதா.....!"
"நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா....நான் பாத்துக்கிறேன்.....எல்லாம் நல்லபடியா நடக்கும்.....!"
"ஏண்டி....நான் சொன்னது எனக்கேவா.....?"
"உன் மகள் உன்னைய போலதானம்மா இருப்பேன்....ஹா..ஹா.."
********************************************************
(நான்கு மாதங்களுக்குப் பின்....)
"என்னமா...மாப்பிள என்ன சொல்றாரு.....?"
"அது ஒண்ணுமில்லப்பா....எல்லையில சண்டைவர்றா மாதிரி இருக்குறதுனால உடனே வரச் சொல்லி ராணுவத்துல இருந்து அழைப்பு வந்திருக்குப்பா...."
"ஆமா மாமா.....நான் உடனே போயாகனும்.....!"
"ம்ம்....அம்மா கீதா....இதுக்குதான் நான் அன்னைக்கே சொன்னேன்.... ராணுவத்துல இருக்குற மாப்பிள்ளை வேண்டாம்மான்னு......"
"அப்பா.....என்னப்பா பேசுறீங்க...?நாட்டுல இருக்குற கோடானு கோடி மக்களையும் எதிரிங்ககிட்ட இருந்து பாதுகாக்கிறது எவ்வளவு பெரிய உழைப்பு,தியாகம்,பெருமை தெரியுமா?இன்னக்கி நாட்டுல, அடுத்த வீட்டுல கொலையே நடந்தாலும் நமக்கெதுக்கு வம்புன்னு விலகி இருக்குற காலத்துல..கல்யாணமான புதுசு...புது பொண்டாட்டி...அது இதுன்னு சுயநலம் பாக்காம...நாட்டுக்காக உழைக்க போகணும்னு சொல்றாரே....அவரோட நல்ல மனசப் புரிஞ்சுக்காம......"
"அதில்லமா........"
"நீங்க என்ன சொன்னாலும் சரி நான் அனுப்பத்தான் போறேன்...!"
"நான் சொன்னா நீ கேட்கவா போற...அதுக்கு மேல உன் இஷ்டம்!!"
********************************************************
(ஒரு மாதத்திற்குப் பின்....)
"அகில இந்திய வானொலி நிலையம்..செய்திகள் வாசிப்பவர் கண்ணன்.முக்கிய செய்திகள் மத்தியில் புதிய அரசு இன்று ஆட்சி அமைக்கிறது.இந்திய எல்லையில் நடைபெற்ற போரில் மூன்று இந்திய வீரர்கள் உயிர் நீத்தனர்.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்............ உயிர் நீத்த வீரர்கள் விவரம்:நெல்லையை சேர்ந்த ரவிகிருஷ்ணன்...திருச்சியை சேர்ந்த அரவிந்த்..........."
"ஆ..அய்யய்யோ...போச்சு...எல்லாம் போச்சு.....அம்மா கீதா..............."
(அந்த அலறலின் நாடித்துடிப்பு குறைய ஆறு மாதங்களாகியது.)
********************************************************
"மன்னிச்சுகிடுங்க....தாயோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு...எங்களால பிள்ளையை மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சது...நாங்க முடிஞ்சத செஞ்சுட்டோம்...அதுக்கு மேல ஆண்டவன்தான் காப்பாற்றனும்....போய் பாருங்க "
"கீதா...கீதா....அம்மா...கீதா....கண்ண திறந்து பாரும்மா...மாப்பிள அரவிந்தே பிறந்து வந்தது போல இருக்கும்மா...பாரும்மா...கீதா...."
(மெதுவாக கண்ணை திறந்து தன் குழந்தையை பார்த்த கீதா...அப்பாவை நோக்கி...)
"அப்பா.."
"சொல்லுமா...!"
"இவனை ஒரு சிறந்த ராணுவ வீரனா ஆக்கி..என் கணவரைப் போல கடைசி மூச்சு வரைக்கும் நாட்டுக்காக போராடக் கூடிய ஒருவனாக இவனையும் ஆக்கனும்பா...செய்வீங்களாப்பா ....?"
"என்னமா இது....?"
(மனைவியின் பக்கம் பரிதாபமாய் பார்த்தார் கீதாவின் அப்பா....அவளோ அழுதுக் கொண்டே... )
"சரின்னு சொல்லுங்க...உங்களுக்கு தெரியாததா... சின்ன வயசுல இருந்தே அவள் அப்படித்தான்...பிடிவாதக்காரி...ஆனா அவ பிடிவாதத்துல ஒரு அர்த்தமிருக்குமுங்க "
"சரிம்மா....."
(எல்லையில் சென்று சண்டையிடா விட்டாலும்...நாட்டுக்காக மகனை கொடுத்த திருப்தியுடன் வீர இறப்பெய்தினாள்.. கீதா.....அவள் அப்படித்தான்... )