என் உயிரில் கலந்த இசையே சஹானா கண்கள் நீயே காற்றும் நீயே மகனுக்காக
என் உயிரில் கலந்த இசையே சஹானா...........!
கண்கள் நீயே காற்றும் நீயே..........! மகனுக்காக..
பெண் குரலில் ஒரு பாடலென்றால் அது சுசீலா அம்மாவின் குரலாகவோ இல்லை ஜானகியம்மாவின் குரலாகவோ இல்லாவிட்டால் சித்ரா அக்காவின் குரலாகவோ இருக்கவேண்டும்! இல்லையென்றால் காதுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற குடைச்சல்! பாடலேன்றாலே அது இனிமையானதாகவும் மனதிற்கு சுகமளிப்பதாகவும் இருக்க வேண்டும்! நான் எப்பொழுதுமே மிகவும் மென்மையான இசையையே விரும்புவேன்! ஆனால் என் குழந்தைகள் உலகில் எந்த மூலையில் டப்பாங்குத்து பாடல் இருக்கிறதோ அதைத்தான் கேட்பார்கள்! அவர்கள் எதைக் கேட்டாலும் நான் அதை பெரும்பாலும் காது கொடுத்துக் கேட்பதில்லை! ஆனால் அடிக்கடி ஒரு பாடல் என் காதுகளுக்குள் நுழைந்து இதயத்தை தொட்டு என் சிந்தைக்குள் நுழைந்து என்னை என்னவோ பண்ணிற்று!
தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப் பெரிய வரம்! ஒரு பெண் தாயானால் மட்டுமே அவள் முழுவளர்ச்சியடைகிறாள்! பெண்மைக்குரிய தன்மையும் அடைகிறாள்! இதுவே இயற்கை! ஒரு தாய்மைக்குள் அன்பு, இரக்கம், கருணை, பொறுமை, தியாகம், பகிர்ந்து கொடுத்தல், விட்டுக்கொடுத்தல், கனிவு போன்ற எண்ணற்ற நல்ல குணங்கள் பொதிந்து கிடக்கின்றன! இத்தகைய நல்ல குணங்களை எந்த பெண் பெற்றிருக்கிறாளோ அவளே ஒரு சிறந்த தாயாக முடியும்! அந்த வகையில் ஒருநாள் இப்பாடலை நான் கேட்டேன்!
இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது என் மகள்! பெரும்பாலும் நான் எந்த பாடலைக் கேட்டாலும் அதன் வார்த்தைகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பேன்! இப்பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆழிக்குள் முக்குழித்தெடுத்த முத்தை அழகான ஒரு மாலையில் கோர்ப்பது போன்று மிகவும் நேர்த்தியான வார்த்தைகளால் கொர்க்கப்பட்டிருந்தது! அந்த எழுத்திற்கு சொந்தக்காரர் யாரென்று நான் கவனிக்கவில்லை! ஆனால் அடிக்கடி இந்த பாடலைக் கேட்டேன்!
இவ்வளுவு என் நெஞ்சிற்குள் நிலைத்து நிற்கும் வரிகளை எழுதியது யாராக இருக்கும்? பொதுவாக என் மனதிற்குகந்த பாடலில் முதலில் இடம் பிடிப்பது லிரிக்ஸ் எனப்படும் கவிதைவரிகளும் அதை எழுதிய பாடலாசிரியர் என்ற கவிஞரும் தான் அதன் பிறகு அப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர்! அதற்கடுத்தது அதைப் பாடிய பாடகர்களும் கடைசியாக அப்பாடலுக்கு முழுவடிவம் கொடுக்கும் திரைப்பட நடிகர்கள்! அல்லது கதாப்பாத்திரங்கள்! அந்த வகையில் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் தாமரை என் இதயத்திற்குள் மெல்ல நுழைந்தார்!
அந்தப் பாடல்தான் "கண்கள் நீயே காற்றும் நீயே" என்ற முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்! நான் இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை! இந்த படத்ததின் இப்பாடலை மட்டும் you tube ல் பார்த்தேன்! ஒரு விதவைத் தாய் கால் ஊனமான மகனை மிகவும் கடின உழைப்பின் மூலம் வளர்க்கிறாள்! அக்குழந்தையின் கால் ஊனத்தை சரிசெய்கிறாள்! அதற்காக அவள் படும் கஷ்டங்களும் அந்த மகனை எங்கு சென்றாலும் தன்னுடனே வைத்திருக்கும் ஒரு பாசமான தாயின் பின்னணி தான் இப்பாடல்!
ஒருவன் அந்த தாயை காமப் பார்வை பார்த்தான் என்பதற்காக அவள் கூந்தலை இழந்து மொட்டையடித்துக் கொள்கிறாள்! அந்த இடத்தில் அவள் கூறும் வார்த்தை "என் பையனை வளர்க்க உடம்பில் உயிர் இருந்தால் போதும் அழகு தேவையில்லை" நிஜம் தான் ஒரு குழந்தையை வளர்க்க ஒரு தாய் நடத்தும் போராட்ட வாழ்க்கை மிகவும் கொடுமையானது!அதற்கேற்றாற்போல் இப்பாடல் வரிகள் அந்த தாயின் வலிகளைத் தாங்கிப் பிடிக்கின்றன!
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
. இவ்வரிகளில் துவக்கத்தில் ஒரு தாயின் முழு எதிர்பார்ப்பும் அம்மகனையே சுற்றி பின்னப் பட்டிருக்கிறது! தன்னைக் கொன்று மறுபிறவி எடுத்துதான் ஒரு தாய் ஒரு குழந்தையை இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துகிறாள்! ...........
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை.........இவ்வரிகளில் அது உண்மையாகிப் போகின்றது!
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேலை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்...........இவ்வரிகளில் குழந்தை பெற்றவுடனே ஒரு தாய் காணும் கனவு "மகன் நல்ல முறையில் வளர்ந்து ஆளாகி தன்னை தாங்க வேண்டும் என்பதுதான்! அப்படியொரு சூழ்நிலை வரும் பொழுது ஒரு பிரிவு வரும் அப்பிரிவை நிச்சயம் ஒரு தாயால் தாங்க முடியாது! அதை எவாளவு அழகாய் சொல்லியிருக்கிறார் தாமரை....அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்...இவ்வரிகள் அந்த வலியை சொல்கின்றன!
ஒரு குழந்தையின் சிறு சிறு குறும்புகளையும் பேச்சுக்களையும் கூட மேதைகளுக்கு ஒப்பாக நிலைநிறுத்திப் பார்க்கிறாள் இவள் தான் தாய்!
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம் ..........தன்னை விட்டு தன் குழந்தை ஒரு நிமிடம் கூட பிரிந்து விடக் கூடாது என்று நினைத்து மறுபடியும் கருவிலேயே வைத்து விடலாமா என்று யோசிக்கிறாள்! அது நிஜம் தான் குழந்தை எவ்வளவு வளர்ந்தாலும் அவனை கருவில் சுமந்த நாட்களை ஒரு தாய் மறக்கவே மாட்டாள்! கருவறையை விட பாதுகாப்பான இடம் ஒரு குழந்தைக்கு வேறென்ன இருக்க முடியும்?
இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் என்மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டன! கவிஞர் வைரமுத்துவிற்கு அடுத்தபடியாக என் மனதில் இடம் பிடித்த கவிஞர் தாமரை தான் என்பதில் எனக்குப் பெருமை! ஒரு பெண் இவ்வரிகளை உணர்ந்து மிகவும் நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் பாராட்டிற்குரியவரே! தாய்மையைப் பற்றி ஒரு பெண்ணைத்தவிர எந்த ஆணும் அழகாய் சொல்லிவிட முடியாது ஆனால் ஆண் கவிஞர்களில் வைரமுத்து தனித்துத் தெரிகிறார்!
அதற்கடுத்து இப்பாடலின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இவரைப் பற்றி நான் சொல்லித்தெரியவேண்டியது ஒன்றுமில்லை! இசைப் பரம்பரையில் பிறந்தவர்! தாயின் கருவறையிலேயே இசையோடு வளர்ந்தவர்! மென்மையான இசை மூலம் இப்பாடலுடன் வாழ்ந்திருக்கிறார்!
பாடகி சித்தாரா! முதலில் இப்பாடலைக் கேட்கும் பொழுது என்ன பாடலிது தூக்கிப் போடு என்று கத்துவேன் கேட்கும் போது கோபமாக வரும் ஆனால் சீக்கிரத்தில் பழகும் எதுவும் சீக்கிரத்தில் நம்மை விட்டுச் சென்று விடும் ஆனால் இப்பாடல் மெல்ல மெல்ல மனதிற்குள் நுழைந்து அம்சாமான இடத்தைப் பிடித்துவிட்டது! அடிக்கடி என் நாவில் வந்துபோகும் பாடலானது! அதற்கு சித்தாராவின் குரலும் ஒரு காரணமாய் அமைந்தது! கீச்சுக் குரலில் பாடாமல் ஒப்பன் வாயிசில் பாடியிருப்பது இதன் சிறப்பு! நல்ல ஹஸ்கி வாயிஸ் என்று சொல்வார்களே அதுதான் இது! அழகான குரல் முதலில் இந்த குரல் எனக்குப் பிடிக்கவேயில்லை! ஆனால் இப்பொழுது என் மனத்தை விட்டு அகலவில்லை!
நான் எப்பொழுதாவது இப்பாடலைப் பாடினால் என் மகள் என்னிடம் சொல்வாள் "நல்லா உன் மகனைக் கொஞ்சு" என்று கோபப் படுவாள் நான் சொல்வேன் அடி அம்மாடிஎனக்கு ரெண்டு பெரும் ஒண்ணுதான் இந்தப் பாடல் உங்கள் இருவருக்கும் தான் என்று சொல்வேன்! அது அவளுக்கும் தெரியும் ஆனால் அக்குழந்தை மனது சிறிது நேரம் என்னைக் குழந்தையாக்கி வேடிக்கைப் பார்க்கும் !
சரி இப்பொழுது இந்தப் பெரிய கதைஎதற்கு? விஷயம் இருக்கிறது இல்லாமலா? என் பையன் என்னைவிட்டு சற்றுத்தொலைவில் செல்கிறான் கல்லூரிக்கு படிக்க! அதை இந்த தாய் மனம் எப்படித்தாங்கும்?என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்............இந்த நிலைதான் எனக்கும்! இதுதான் தாய்மையா? ஆனாலும் தேற்றிக் கொள்கிறேன் மனதை.....பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை....இவ்வரிகள் மூலம்!
கேட்டுப் பாருங்களேன் இப்பாடலை ஒரு முறை!
.............சஹானா தாஸ்!