நீயே விதி செய்வாய்

நெடுங்காலம்
பூட்டி இருக்கும்
நிலவறை கதவமுடை

உள்ளிருக்கும்
உன்னை
வெளியேற்று

வெளிவரும்போது உன்கையில்
விஞ்ஞான நூல்
அழகு செய்யட்டும்

அமிலத்திலும் அழியாத
அழுக்குகள் கழுவு
-அப்போதே
உன் மூன்றாம் கண்
திறந்து விட்டது

இனி-
சிவனே என்று
இருக்க மாட்டாய்
சிவனே உனக்கு
இருக்க மாட்டார்

வெற்றுச் சவங்கள்
வீதி நாடகம் நடத்தி
வசந்தம் வந்ததாய் வரலாறில்லை.

காணாக் கண்கொண்டும்
பேசாவாய்கள் துணையில்
தூரப் பயணங்கள்
தூரமாகிப் போகும் .

எழுவதும் விழுவதும்
இனி
நீயே விதி செய்வாய்

உன்
உள்ளத்துக் கோயிலில்
இனி எப்போதும்
பள்ளியெழுச்சி பாசுரங்கள் தேவைப்படாது.

செருக்கு சங்கிலிகள்
உடைபடும் வரை
முறுக்கு மனிதம்
சாதிக்கப் போவதில்லை -

பேரிரைச்சல்
வெள்ளத்திற்கு பிறகும்
கம்பீரத்துடன்
கதை சொல்கிறது நாணல் .
அங்கிருந்த தென்னையின்
அங்க அடையாளங்கள் எங்குமில்லை

வறண்டு கிடக்கும்
உன் மனத் தடாகத்தில்
ஒரு நாள் நீரூற்று பிறக்கும்
பறவைகள் நீரருந்த வரும் -

அப்போது வானம்
சிவப்பாக இருக்கும்
அகலிகைகள் ராமருக்கு
காத்திருக்க மாட்டார்கள்.

கலங்கிய குட்டையின் சேறு
யானைகளின் பூச்சிகொல்லி கவசம்
புதையலுக்கு போனவன்
புதைந்து போனான்

விழுந்து நிமிர்ந்து ஓடியவன்
பறையறைந்து சொன்னான்
பூமியில் பூகம்பம்
பூமிக்கு சேதாரமில்லை

செய்கூலியையும் சேதாரத்தையும்
பூகம்பம் வாராக்கடனில்
எழுதிக்கொண்டது

வந்துபோன வருத்தமும்
வறண்டுபோன நதியும்
மாற்றமடைந்து
மீன்களுக்கு எழுதிப் போட்டன
மஞ்சள் மை தடவிய நற்செய்தி

ஒருமுறையோ
இருமுறையோ
கூவும்சேவல்
ஓயாமல் கூவியது
விடியல் வந்ததாய்....

எழுதியவர் : சுசீந்திரன் . (6-Jul-14, 11:19 am)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : neeye vidhi seivaai
பார்வை : 196

மேலே