எனக்கு செவ்வாய் தோஷமாம்
என் சொந்த பந்தம் எல்லாம்
நான் உட்கார்ந்த நாளிலிருந்து
ஊர் ஊரா மாப்பிளை தேடுது -இது
கரைசேரா படகுன்னு மனம் நொந்து திரும்புது
முன் நரை மறைக்க நான் முயன்று தோற்றேனே!
முப்பதுக்கும் நாப்பதுக்கும் இடையில் நின்னு மனம் காண அலைந்தேனே !
ஊடலுக்கும் ,கூடலுக்கும் மன ஒத்திகை போட்டேனே!
வெளியில் அழுதா வெட்க கேடுன்னு விம்மி அழுதேனே!
நொந்து வெந்தேனே!
பள்ளி தோழி எல்லாம் புள்ளையோட பார்க்கும் போது மனம் வேகுதே!
நான் செஞ்ச பாவம் என்ன? ,இது யார்விட்ட சாபமோ?
முகவரி இல்லா கடிதாசி ஆவேனோ?
நான் கன்னியா தான் சாவேனோ?
பார்த்த மாப்பிள்ளை எல்லாம் பாதி ராத்திரி கனவில் வர
என் கற்பு என்னை பார்த்து சிரிக்குதே!
மூணு நாலு புள்ள பெத்து ஆளாக்கி ரசிப்பேன்னு ஆணவமா சொன்னேனே! - இன்று
பூவா மரம் போல மலடாகி போனேனே!
சந்ததி எழுத ஒரு வழிகேட்டு புலம்புறேனே!
தெரு ஓர நாய் கூட குட்டியோட தூங்குது
நான் ஆனதையா தான் சாவேனோ?
அஞ்சி அஞ்சி நடுங்குரேனே!
அழுகிற கர்ப்பபை எப்ப அழுக நிறுத்துமோ?
பயத்தோட நோக்கியே பருவம் இதை கழிக்கிறேனே!
இப்போ..................
செவ்வாயின் தோஷம் காண 'மங்கல்யான் 'இருக்குது
என் செவ்வாய் தோஷம் போய் 'மங்கள நாண்' வருமா?
மடமை தான் வெல்லுமா?
விஞ்ஞானம் தோஷம் இதை கொல்லுமா?