சினிமா சாபங்கள் இனிமேல் சாகட்டும்
திரைதான் மனிதனின்
மிகப்பெரிய குறை
திறன்தான் மனிதனின்
அளப்பெரிய நிறை
திரையென்றாலே மறைவுதான்
நடிப்பென்றாலே மறைப்புதான்
மூன்றுமணிநேரம் முட்டாளாகிட
முன்னூறுரூபாய் துட்டளிக்கிறான்
திரையில் மாற்றான்
வரவை ஏற்றான்
நடிப்பில் வீற்று
தமிழன் தோற்றான்
வெள்ளித் திரையில்
வீரங்காட்டும் திருடனே
கொல்லைத் தரையில்
மோதிக்காட்ட முடியுமா?
திரைபோட்டு படங்காட்ட
சனக்கூட்டம் கைதட்டுது
கண்ணுக்குமுன் திரையிருப்பதை
மடக்கூட்டம் மறந்துட்டுது
முகத்திரை அணிந்திட
சினித்திரை இனித்தது
நிஜத்தினை அறிந்திட
மனத்திரை மறுக்குது
தணிக்கைக் குழுவுக்குத்
திணிக்கை செய்ததால்
உதயன் கொட்டகையில்
இந்தியன் வெற்றிவிழா
சிவாஜிக்கு வசூல்வேட்டை
வருமானவரி கட்டவில்லை
கஞ்சிக்குப் படும்பாட்டை
காஞ்சிப்பட்டு உணரவில்லை
நடிகனாக இருப்பவன்
குடிமகனாக இருப்பதில்லை
நடிகனாக இருப்பவன்
குடிகாரனாக இருக்கிறான்
கற்பழித்துக் கொல்வதே
நல்லொழுக்க மான்பென
மன்மதன் சொல்வதை
கேட்டொழுகும் மானிடம்
மாட்டாமல் திருடும்வித்தை
காட்டுகின்ற சினிமாபடத்தை
குடும்பமாய் கண்டுகளிக்க
கொட்டகை நிரம்புகிறது
தீயதெல்லாமே ஸ்டைலானதால்
தீயதில்லாமல் சுருட்டுப்பற்றினர்
தூயதெல்லாமே கலப்படமானதால்
தூயதுதீயதாய் மாற்றப்பட்டன
மாணவனோடு ஆசிரியை
கட்டிலில் கலவிப்பாடம்
ஆணவனோடு தாசிகளும்
கட்டிப்புரளும் சினிமாகூடம்
பட்டம் படித்தவன்
நாட்டை ஆளலாம்
கட்டிப் பிடித்தவன்
நாட்டை ஆளலாமா?
தமிழக அரசியலில்
சினிஉலகப் பிரவேசம்
திரைவிலகும் நாளில்தான்
இனிவிலகும் வெளிவேசம்
சினித்துவம் ஜனித்ததால்
தனித்துவம் இழந்திங்கு
பண்பட்ட தமிழனும்
புண்பட்டு போகிறான்