எழுத்து

ஒரு எழுத்து
உன்னையும் என்னையும்
இணைத்தது !
ஆயுத எழுத்தாயிருந்தவன்
உன்னால்
மெய்யெழுத்தாகி
பின்னர்
உனது உயிரெழுத்தானேன்!
மென்மை மிகு
மெல்லினமும்
வலிமை மிகு
வல்லினமும்
பிறரறியா
சொற்களின் சூட்சுமங்களை
நமக்குக்
கற்றுத் தந்தது !
சொக்கவைக்குமெனது
சொல்லாடலில்
நீ சொக்கித் தவிக்க -
வாள்வீச்சிலும் சிறந்த
உனது வார்த்தை வீச்சில்
நான் வழியறியாது தவிக்க
கவிதைகள்
நம்மை சுவீகரித்துக் கொண்டன !
உன் விழிக்கூர் துளைகளின்
வேய்ங்குழல்களென
எழுத்துக்கள் முளைத்தெழுந்திட
சொற்களின் நளபாகத்தில்
எனக்கு
சுந்தர விருந்துபடைத்தாய்
திகட்டத் திகட்டக்
கவியுண்டோம் !
எழுத்துக்களில்
வார்த்தைகள் முளைப்பதியற்கை
ஆனால்
நமக்கோ
இறக்கைகள் முளைத்தன -
நம்திருவருக்குமான
தொலைவு
நமதெழுத்துக்களின்
இறக்கைகளில் குறுகிட
மேலேறி
ஏறவானத்தின் திறவெளிகளில்
சிறகடித்தோம்!
திடீரென வொருநாள்
எழுத்துக்களின் புரிதல்களில்
நிகழ்ந்த
இலக்கணப் பிழைகளின்
பிறழ்தல்களில் -
பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட்டிருந்ததாக
நாம் நினைத்திருந்த
நம் உறவெழுத்து
மண் எழுத்தாய் மாறி
உதிரத் தொடங்கியது !
எந்த உனது
வார்த்தைகளின் வாள்வீச்சில்
லயித்தேனோ
அதே வார்த்தைகளை
கூராயுதமாக்கி
நமது சிநேகத்தின்
சிரம் கொய்து
உனது அசுர கோப சூலத்தில்
எலுமிச்சையென குத்தி
ஊர்த்தவத் தாண்டவத்தில்
தலை விரித் தாடுகிறாய்
உக்கிர காளியென !
அதே
சுந்தரச் சொல்லாடலால்
உனது பிரியப் புற்றைச்
சுற்றிச் சுற்றிச் சிறகடித்த
இச் சிற்றீசலின்
மெல்லிறக்கைகளைப் பிய்த்தெறிந்தாய்
இருப்பினுமுனது -
பாதச் சுவடு தேடித் தேடி
உன்னிடமே
ஊர்ந்து வந்தயென்னை
சிதைத்து சின்னா பின்னமாக்கி
உனது எழுத்துக்களையடுக்கி
வார்த்தைகளைப் பூசியொரு
கல்லறைஎழுப்பி
அதில் நமது நட்பினை
உயிரோடு புதைத்து விட்டு -
நினைவுச் சின்னமென
பிய்த்தெறிந்த எனது
இறக்கைகளை
பதித்து விட்டுச் செல்கிறாய் !
இன்னும் ஈரேழு
ஜென்மத்திலும்
எந்தவொரு ஊழிக்காற்றிலும்
அங்கு பதிந்திருக்குமெனது
இறக்கை
உனது திசை நோக்கியே
சிறகடிக்கும் போ !
உனது எழுத்துக்களுக்கு
என்று வியர்க்கிறதோ
அன்று
என் கல்லறை வந்து -
உனது வரவிற்கேங்கி
பட படத்துக் கிடக்குமெனது
இறக்கைகளின் சிறகடிப்பில்
சற்றே
இளைப்பாறிச் செல்லலாம்
நீ .