என் வாழ்வை வாழ்பவள் மெய்யன் நடராஜ்
இதழ்மொழி மறந்து இமைவழி நுழைந்து
==இதமெனும் மழை பொழிந்தாள்
முதல்மழை பொழிந்த முகிலவள் அன்பின்
==முத்திரை தனை பதித்தாள்
கதவிடுக் கின்வழி கண்களால் காதல்
==கவிதை அதை வடித்தாள்
உதவிடுஞ் சாக்கில் உலவிய அவளும்
==உளந்தனில் கதை படித்தாள்.
படித்தவள் கதையை பகலிர வாக
==பலமுறை நான் படித்தேன்
துடிப்புள இளமைத் தோப்பினில் விளைந்த
==தோகையின் தேன் குடித்தேன்
இடித்திடு முன்னே எதிர்வரும் மின்னல்
==இடையெனத் தான் கண்டேன்
வடித்திடும் கவிதை வரிகளுக் கெல்லாம்
==வசந்தம் அவள் என்பேன்.
கனவுகள் காணா கண்களின் வாசல்
==கதவினை தினம் திறந்தாள்
வனத்திடை வழியும் அருவியின் புனலாய்
==வாழ்வினில் குளிர் படைத்தாள்
எனதெனும் வானில் இருந்திடும் நிலவாய்
==இளையவள் ஒளி கொடுத்தாள்
தனதெனும் வாழ்வை எனதெனும் வாழ்வாய்
==தானவள் வா ழுகின்றாள்