கற்றவை பற்றவை - ப்ரியன்
பூமியில் யாவரும்
நிரந்தரம் இல்லை
புரியாமல் போனால்
பிறந்திடும் தொல்லை
பணமதில் திளைக்க
பகட்டாய் ஒளிக்க
இச்சைகள் வளர்த்தால்
இன்னல்கள் தருமே
மனங்களும் கசந்து
பிணக்குகள் மலிந்து
நடை பிணங்களாய்
வாழ்வும் எதற்க்கு
ஒற்றுமையாய் நாம்
உயிர் வாழாவிடின்
வளர்ச்சிகள் யாவும்
அடைந்ததுவும் வீண்
இருப்பதில் திருப்திபடு
இயன்றவரை உதவிடு
மனிதனுயிர் மதித்து
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு
அன்பை பகிர்ந்திடு
பேராசைகள் துறந்திடு
இயற்கையோடு பிணைந்து
இயங்கிடு தரணியில்
இனிவரும் தலைமுறை
இன்புற்று வாழ்ந்திட
மானுடம் மாண்பையும்
பைந்தமிழர் பண்பையும்
பயிற்றுவித்தே தினம்
பாலகர்களை வளர்த்திடு