நட்சத்திரங்களின் சிறகுகள்

கண்ணீரின் வேர்கள் நெஞ்சுக்குள் இறங்கும்
கண்களில் பூக்கள் உதிரும்
கண்ணீர்த் தவங்களே கண்ணீர்த் தவங்களே
கறுத்த சாபங்கள் கலையும்

முள்ளே உந்தன் துயர நாட்களில்
ரோஜாக்கள் அரும்பி மலரும்
முரட்டுத் தோழர்உன் உழைக்கும் தோள்மலை
முகட்டினில் வைகறை புலரும்?

நட்சத்திரங்களுக்கு சிறகுகள் தந்தால்
மின்மினிப் பூச்சிகளாய்ப் பறக்கும்
நதிகள் இணைந்து நாட்டுக்குள் நடந்தால்
சொர்க்கத்துக் கவிதைகள் பிறக்கும்

தீபங்களின் திரிகள் தீய்ந்து கருகும்
தூண்டு கோல்களோ உறங்கும்
தீபங்களே நீங்கள் தீவிரம் தணிந்தால்
தேசம் உம்மை வணங்கும்

ஒரேஒரு புன்னகை உதடே எழுது
ஒரு பூவனம் இங்கே பூக்கும்
மனிதக் கனவொன்று மனிதா விதை நீ
மானுடம் புதிதாய் முளைக்கும்

எதுவரை பசியின் கனவுகள் நீளுமோ
அதுவரை பசுமை விரியும்
எதுவரை அன்பு உலகை ஆளுமோ
அதுவரை தான் பூமி சுழலும்...! (1995)

எழுதியவர் : கவித்தாசபாபதி (16-Jul-14, 11:37 am)
பார்வை : 104

மேலே