உணர வேண்டியது

மகுடம் தாங்கிடும் மல்லுடல் மன்னரும்,
மாங்கனி தேங்குடம் ஏந்திடும் பெண்டிரும்,
திகழும் செழுங்கவி முழங்கிடும் புலவரும்,
தேக்கினில் மாளிகை ஆக்கிடும் சிற்பியும் ,
புகழும் பெருமையும் ஈட்டிடும் அறிஞ்சரும்,
புத்தியில்லாதொரு நித்திய மடையரும்,
சகலமும் தமதெனப் பதுக்கிடும் மனிதரும்,
சம்போ சிவமெனச் சாற்றிடும் முனிவரும்,
அகிலமும் தனதென ஆண்டிடும் தலைவரும்,
அவரை நம்பிடும் முட்டாள் தொண்டரும்,
சுடலையில் சமமாய் உறங்கிட நேர்ந்திடும் - இதை
உணர்ந்தால் வழக்கை உன்னதம் ஆயிடும்.