அன்பின் ஆழத்தை அறிவாரோ

தாங்கி மகிழ்கிறது
---தாயின் கரங்கள் !
சாய்ந்து நிற்கிறது
---சேயும் ​களிப்பில் !

பூரிப்பின் விரிப்பில்
---பூத்திட்ட முல்லைகள் !
இதயங்கள் இவர்கள்
---இன்பத்தின் எல்லையில் !

அன்பின் உச்சமோ
---அன்னையின் அணைப்பு !
அரவணைக்கும் சுகமோ
---அருவிநீர் குளியல் !

பாசத்தின் விளிம்பு
---பாரினில் தாயன்றோ !
தாலாட்டும் தென்றல்
---பாலூட்டும் தாயன்றோ !

மழலையின் சிரிப்பும்
---மகிழ்ச்சியின் மாட்சியே !
மண்ணில் காண்பதும்
---எழில்மிகு காட்சியே !

தன்னிலை மறக்க செய்வதும்
---தாய்க்கு சேயால்தானே !
அளவிலா ஆனந்தம் பெறுவதும்
---சேய்க்கு தாயால்தானே !

தாய் சேய் உறவென்பது
---தரணியில் உயர்வன்றோ !
அன்பின் ஆழத்தை அறிவாரோ
---அவர்களின் உறவிடையே !

புவியே மகிழட்டும் மழலையால்
---புன்னகை பூக்கட்டும் பூமியும் !
வையத்தில் வாழ்வோர் உணரட்டும்
---தாய்சேய் உறவின் உயர்வை !

பழனி குமார்

( படம் - முகநூல் பதிவிறக்கம் )

எழுதியவர் : பழனி குமார் (19-Jul-14, 8:27 am)
பார்வை : 644

மேலே