பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்…

கல்லாய் மனமும்
களங்கமுடை முள்குணமும்
செல்லாப் பணமாய் என்
அற்பச் செய்கைகளும்
செல்லாது என்னுள்ளே
செவ்வனே உறைந்தனவே!

மானுட இயல்பெலாம்
மௌனமாய் கரைந்தொழிய
குரங்கினத்தின் குணமென்னுள்
கூடிக் குதித்தாட
மரங்களினூடே தாவுதற் போன்று
மணித்துளிகள் சிலவற்றுள்
நிதம் மாறுகின்றன – என்
மாசு நிறை எண்ணங்கள்!

காசையே தேடும்
கயவரோ டொன்றானேன்!
பயமுணர்ந்ததில்லை,
பாதகங்கள் செய்வதற்கு!
நயமிலா வார்த்தையையே
நாள்தோருமுதிர்த்தன -என்
நஞ்சு நிறை “நா” நாகம்!

போகும் வழி தவறென்று
புரிந்தே பயணிக்கும்,
பொல்லா வினையேன் – நான்,
புகழுமாறு ஒன்றறியேன்!
இதையின்று உணர்ந்த பின்னே,
நன்றே செய்தறியா – என்
நெஞ்செண்ணி விம்முகின்றேன்!

கொஞ்சிப் பேசியதில்லை!
கோபமோ, ஏராளம்…ஏராளம்!!
பாராளும் மன்னனென
நினைந்திருந்த என்தலையில்,
பெரும்பாறை ஒன்றவிழ்ந்து
வீழ்வதுபோல் விதிர்க்கின்றேன்!

மனமின்று தவறுணர்த்தத்
துயர் வளர்த்துத் தவிக்கின்றேன்!
ஐயா…. போதும் இவையும்!
வேண்டாமே இன்னும் சிலவும்!?
மால் அயனும் காணவொண்ணா,
உயர்ந்திலங்கும் பெம்மானே….
எனை, இனியேனும் மனமிரங்கி
ஆண்டு கொள்ளே….ஆண்டு கொள்ளே….!


*************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (19-Jul-14, 4:43 pm)
பார்வை : 186

மேலே