ஒரு சம்பிரதாயமான உரையாடலின் போது

ஒரு
சம்பிரதாயமான
உரையாடலின் போது
கைகளை
எங்கே வைத்துக்கொள்வது
என்பது பற்றி
எனக்கு
எப்போதும் பிரச்சனைதான்
கைகளை
அந்தரத்தில்
தொங்கப்போடுவ்து
பெருத்த
அசௌகரியம்
கைகளை
குறுக்கே கட்டினால்
அது
எதிராளியைப்
புறக்கணிக்கும் செய்யலாம்
பாக்கெட்டில்
கைகளை விட்டுக்கொண்டால்
படர்தாமரையோ
என்று சந்தேகிக்கிறார்கள்
புறங்கை கட்டுவது
சற்றே
சௌகரியமாய் இருந்தாலும்
சாஸ்திர வெங்காயம்
அதை
அனுமதிப்பதில்லை
கைகளை
ஆட்டி ஆட்டிப்பேசும்
லாவகமும்
கைவருவதில்லை
தாடையைச் சொறிவது,
மண்டையைச் சொறிவது
கையால்
கையையே
மாற்றி மாற்றிச்சொறிவது
கொசு கடித்தது போல
டப் என்று அடித்துக்கொள்வது
விரல்களில் சொடக்கு எடுப்பது
வெறுமனே நகத்தைப்
பார்த்துக்கொண்டிருப்பது
என
கைங்கரியங்கள்
சில பல செய்துதான்
ஒழிக்க வேண்டியதிருக்கிறது
கைகளைப் பற்றிய
பிரக்ஞையை
ஓர் உரையாடலின்
உடல்மொழி வெளிப்பாடுகள்
பற்றிய
உங்களது அளவுகோல்கள்
என்னை
பயமுறுத்தி விடுகின்றன
எப்போதும்
எனது கைகளை
ச்சூ ச்சூ
என்று விரட்டிக்கொண்டேயிருக்கிறேன்
உரையாடல் நெடுகவும்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (20-Jul-14, 9:58 am)
பார்வை : 97

மேலே