வெகுதூர விடியல் – கே-எஸ்-கலை

விடியலைத் தேடி விரல்நுனி தேய
கவிதைகள் செய்கின்றோம் – சிறு
செடியினைக் கூட வளர்க்கா எழுத்தில்
செழிப்பைத் தேடுகிறோம் !

எழுபதைக் கடந்தும் ஏரினை இழுத்தவர்
எலிக்கறி தின்கின்றார் – நாம்
உழுவதை மறந்து உழுபடை துறந்து
எழுத்துகள் செய்கின்றோம் !

ரவைகள் துளைத்து ரத்தம் வடித்த
ரணகளம் காயவில்லை – பெரும்
அவைகள் அதிரும் சூளுரை மட்டும்
இன்னும் ஓயவில்லை !

பற்பல சாதிகள் பாரினில் வளர்த்து
பங்கம் செய்கின்றோம் ! – பின்
பொற்கிழி வாங்கிட சாதிகள் எதிர்த்து
சங்கம் செய்கின்றோம் !

ஊரினில் ஒருவன் ஊழல் செய்தால்
ஊமையாய்ப் போகின்றோம் – பின்
வீரியம் தெறிக்கும் வார்தைகள் சொருகி
வேதம் ஓதுகின்றோம் !

பண்பாடு கலைகள் காப்போம் என்று
பாட்டினில் குதிக்கின்றோம் – பின்
பண், பாட்டு விழுமியம் கெடுத்தே
மேற்கினில் உதிக்கின்றோம் !

ஒற்றைப் பைசா உழைத்து வாழ்ந்திட
ஒருவழித் தெரியாது – ஊருக்கு
கற்றைக் கற்றையாய்ப் புத்திச் சொல்வது
திருவழி ஆகாது !

செய்வதைச் திருந்தச் செய்ய மறந்தபின்
செய்யுளில் ஏதுபயன் ? – தன்
மெய்யினை வருத்தி உய்ய மறந்தவன்
வாழ்வினில் ஏதுபயன் ?

புதிய கவிதைகள் பூமியில் விதைத்து
புரட்சியா செய்வித்தோம் ? – அட
சதியைக் கண்டு விதியை நொந்தோம்
வேறென்ன சாதித்தோம்?

எதுகை மோனை சந்தம் வைத்து
ஏதடா சாதித்தோம்? – வெறும்
ஏட்டுப் பிதற்றலில் எகிறிக் குதித்து
ஏழ்மையே செய்வித்தோம் !
------------------------------------------------------------------------
வீட்டின் விடியலை உறுதிச் செய்வோம்
ஊருக்கு வெளிச்சம்வரும் – வெறும்
பாட்டில் மட்டும் வாழ்வதை விடுப்போம்
பாருக்கே விடிவுவரும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (20-Jul-14, 10:34 am)
பார்வை : 384

மேலே