விவாத மேடை
[[ஒரு கற்பனை மேடை]]
*************************************
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
“வணக்கம் நேயர்களே. மீண்டும் ஒரு விவாத மேடையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய விவாத மேடையின் தலைப்பு “இன்றைய நாட்டு நடப்பும் மக்களின் உணர்வுகளும்” என்பதுதான். என்ன நேயர்களே தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதா? எதையும் வித்தியாசமாகச் செய்வதுதானே எங்களின் வேலை. நாட்டின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதைப்பற்றியதான மக்களின் சிந்தனை என்ன அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விவாதிக்க வந்திருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை அறிமுகப் படுத்துவதற்கு முன்பாக சில ஒளிப்படக் காட்சியைப் பார்க்கலாம்…”
படம் ஓடி முடிகிறது
நி. ஒ.
“இப்படித்தான் எங்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு என்று அனுதினமும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அரசு தனது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிகிறது. இதை எப்படி நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். பொது மக்களாகிய நம்மால் என்ன தீவு காண முடியும். இதற்கெல்லாம் யார் பொறுப்பு. இந்தப் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது. இதற்கு ஆளுங்கட்சியின் சார்பில் இங்கு வந்திருப்பவர் என்ன சொல்கிறார். அதை எதிர்த்து எதிர்கட்சியினர் என்ன சொல்கின்றனர். சமூக ஆர்வலர் என்ன சொல்ல வருகிறார் என்பதையெல்லாம் இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்க இருக்கிறோம். மன்னிக்கவும் .... பேசிக் கொண்டே வந்திருக்கும் பிரபலங்களை அறிமுகப்படுத்த மறந்து விட்டேன். மறந்து விட்டேன் என்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அவ்வளவு கேள்விகள் நம்மிடம் தொக்கி நிற்கின்றன. இப்போது விருந்தினர்களை அறிமுகப்படுத்துகிறேன்... அதற்கு முன்னால் ஒரு விளம்பர இடைவேளை. காத்திருங்கள் நேயர்களே”
விளம்பரம் ஓடி முடிகிறது.
நி.ஒ.
“நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் எவர்க்கும் மனம் ரணமாகி இருக்கும். அத்தகு கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. கொலை கொள்ளை கற்பழிப்பு என்று அவலங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய ஒரு அலசலே இந்த விவாத மேடை. சரி நேயர்களே வந்திருக்கும் விருந்தினர்களை நாம் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். நாடு நல்ல நாடு என்ற கட்சியைச் சேர்ந்த தாவல் சவுண்டப்பன் நம்மிடையே வந்திருக்கிறார். [அவரை நோக்கி] வணக்கம் தாவல் சார். பாய்மரக் கட்சியின் போர்வாள் வேங்கை காவலன் நம்மிடையே அமர்ந்திருக்கிறார். [அவரை நோக்கி] வணக்கம் சார். கவிஞரும் சமூக ஆர்வலருமான kpp ஐயா அவர்கள் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். [அவரை நோக்கி] வணக்கம் ஐயா.
இப்போ நேரடியாகவே பிரச்னைக்கு வருகிறேன். முதலாவதாக kpp ஐயாவிடம் இருந்தே நிகழ்ச்சியை துவங்கலாம் என்று நினைக்கிறேன்.
“ஐயா இப்போ நாட்டின் நிலை மிகவும் மோசமாக இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த அவல நிலை தொன்று தொட்டு இருந்து வருவது நாட்டு மக்களுக்கு தெரியாமல் இல்லை. அப்படி இருந்தும் யாதொரு சிறு கோபமோ உணர்ச்சிக் கொந்தளிப்போ அல்லது குறைந்தபட்ச எதிர்ப்போ கூட காட்டாமல் மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது இந்த சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பை உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா?
kpp ஐயா
“முதலில் எல்லோருக்கும் வணக்கம். இன்றைய நாட்டு நடப்பைப் பற்றிய கவலை நமக்கும் இல்லாமல் இல்ல...
குற்றங்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கெல்லாம் காரணமாய் இருப்பது என்ன. அதன் பின்னணிக்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி முதலில் நாம் அலச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..."
ஐயா பேசப்பேச இடையில் நுழைகிறார் நி.ஒ.
நி.ஒ
“ஐயா நான் கேட்பது இந்த மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்வது என்பது ஒரு குற்ற உணர்ச்சியாகத் தெரியவில்லையா? அதற்கான தங்களின் பதிலை நான் எதிர்பார்க்கிறேன்”
kpp ஐயா
“அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். குற்றங்கள் எதனால் நடைபெறுகிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். உதாரணமாக சிறார் குற்றங்கள் பெருகிக் கொண்டு இருப்பது நமக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியின் காரணமும் குற்றங்கள் பெருகக் காரணமாய் அமைந்துவிட்டது. அதற்காக நான் அறிவியல் வளர்ச்சி வேண்டாம் என்று....”
நி. ஒ. குறுக்கிடுகிறார்
“நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது தற்கால அறிவியல் வளர்ச்சிதான் குற்றங்களுக்குக் காரணம் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. உதாரணத்திற்கு அவசரமாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் உங்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லவேண்டும் என்றால்., இந்த விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக கிளம்பும் நீங்கள் ஒரு ஆட்டோவோ ஒரு வாடகைக் காரோ அல்லது ஒரு பைக்கோ எடுத்துக் கொண்டு வராமல் சைக்கிளிலோ நடந்தோ வந்தால் எப்போது நமது நிலையத்திற்கு வந்து சேருவது. இந்த பரிணாம வளர்ச்சியை நீங்கள் குறையாக சொல்ல வருகிறீர்களா ஐயா?”
மற்ற விருந்தினர்கள் சிரிக்கின்றனர். ஐயா கோபம் கொள்கிறார்.
kpp ஐயா
“நான் என்ன சொல்கிறேன் என்றால்... எந்த கண்டு பிடிப்பையும் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. அதை அப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையே சொல்ல வருகிறேன். சரியான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதையே கருத்தாக முன் வைக்கிறேன்.. அதாவது இன்னும் சற்று விளக்கமாக சொல்ல.....
நி.ஒ. குறுக்கிடுகிறார்
நி,ஒ.
“ஐயா ஒரு நிமிடம்.... பிறகு உங்களிடம் வருகிறேன். அதற்கு முன்னால் ஒரு சிறு விளம்பர இடைவேளை”
விளம்பர இடைவேளை முடிகிறது
நி.ஒ
“நீங்க சொல்லுங்க... தாவல் சவுண்டப்பன். ஐயா சொன்னதுபோல எதையும் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. நாம்தான் சரிவர எதையும் பயன்படுத்தவில்லை என்று சொல்கிறார். “நாடு நல்ல நாடு” இயக்கம் இப்போது ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. நீங்கள் அதன் ஜீவ நாடியாக இருக்கிறீர்கள்.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் மாதம் மும்மாரி பொழிய வைப்போம் என்றும் ஒரு வருடத்தில் யாரும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலையே இருக்காது என்றும்.. அதாவது எல்லோரும் தன்னிறைவு அடைந்து விடுவார்கள் என்றும் நாட்டில் குற்றவாளிகள் எல்லோரும் ஆளுக்கொரு பாயை எடுத்துக்கொண்டு தூங்குவதற்கு அடுத்த கண்டத்திற்குப் போய்விடுவார்கள் என்றும் தேர்தல் வாக்குறுதியாக சொன்னது எனக்கு நினைவில் உள்ளது. அதுவும் இதே விவாத மேடை ஒன்றில் சொன்னதாக பதிவில் உள்ளது என்று நினைக்கிறேன். இப்போ நான் கேட்பதெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் உங்களது நிலைப்பாடுகள் எல்லாம் என்ன ஆனது என்பதுதான். சட்டம் ஒழுங்கு இந்த அளவிற்கு கெட்டுப் போனதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
தாவல் சவுண்டப்பன்
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு என்ன செய்யவில்லை என்று நினைக்கிறீர்கள்? எங்காவது ஒரு குற்றம் நடக்கிறது. எங்காவது ஒரு கொலை நடக்கிறது. எங்காவது ஒரு கற்பழிப்பு நடக்கிறது. அதையெல்லாம் வைத்து தினமும் இப்படி நடப்பதாக நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக உள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உத்தரப்ரதோஷ நாட்டில்....”
நி.ஒ.
“சார் அது உத்தரப்பிரதேச மாநிலம்....”
தாவல் சவுண்டப்பன்
“சரி நீங்கள் சொன்ன பகுதியாகவே இருக்கட்டும். அங்கே நடக்கும் கற்பழிப்பை விட இங்கு குறைவுதான். இராக்கில் நடக்கும் கொலைகளைவிட இங்கு குறைவுதான். கொள்ளை போவதுகூட நமது அஜாக்கிரதையால்தான். எங்காவது போகும்போது நமது உடமைகள் எல்லாவற்றையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டால் கொள்ளை நடக்க வாய்ப்பே இல்லை. இந்தப் புள்ளி விவரங்கள் போதும் இல்லையா????
இங்கே வந்து மாட்டிக் கொண்டோமே என்று kpp ஐயா தலையில் கை வைத்துக் கொள்கிறார்.
நி.ஒ.
“இது எந்த அளவிற்கு நமக்கு உடன்பாடு என்பதை நாம் அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. ஏனென்றால் தாவல் சவுண்டப்பன் சொன்ன பதில் அவ்வளவு யதார்த்தமான தொனியில் இருந்தபோதும் அதற்கான ஆதாரங்களை சரி பார்த்த பின்னர்தான் அவருக்கு ஒரு மறுப்போ அல்லது குறைந்தபட்ச ஆமோதிப்போ சொல்ல முடியும்.
அடுத்ததாக “பாய்மரக் கட்சி” யின் போர்வாள் வேங்கை காவலன் அவர்களிடம் நமது கேள்விக் கணையைத் தொடுக்கலாம். ஒரு எதிர்க் கட்சியின் அந்தஸ்தும் இல்லாமல் எந்த இடத்திலும் டெபாசிட் கூட வாங்காமலும் பரிதாமான நிலைக்குத் தள்ளப்பட்ட நீங்கள் தாவல் சவுண்டப்பனின் கருத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். அந்த அளவிற்கு அவரின் வாதம் மிக அழுத்தமாக உள்ளது... நீங்கள் பேசலாம்....
வேங்கை காவலன்
“அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் சொன்னதற்கும் இப்போது சொன்னதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எங்களது கொள்கைகளை காப்பியடிக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. நேற்றுக் கூட இவர் சட்டசபையில் பேசும்போது என்னுடைய தொலைந்துபோன டைரியை வைத்துக் கொண்டு பார்த்துப் படித்துக் கொண்டு இருந்தார். அது ஒரு வருடத்திற்கு முன்பாக தோலைந்து போன டைரி. எனக்கே அதிர்ச்சியாகப் போய்விட்டது. இருந்தாலும் ஒரு சந்தோசம். நான் எழுதி வைத்துப் படித்ததையெல்லாம் அப்படியே வரிக்கு வரி மாறமால் படித்தார். அதற்கு எல்லோரும் கை தட்டினார்கள்...”
நி.ஒ. குறுக்கிடுகிறார்
நி.ஒ
“ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று சொல்ல வருவது புரிகிறது. சரி அந்த டைரியை வாங்கிக் கொண்டீர்களா? என்ன செய்தீர்கள் தொடர்ந்து விவாதிப்போம். நிகழ்ச்சி மிகுந்த சுவாரசியமாகவே செல்கிறது என்று நினைக்கிறேன். kpp ஐயாவிடம் நமது கேள்வியை முன் வைப்பதற்கு முன்பாக ஒரு விளம்பர இடைவேளை”
விவாத மேடை தொடர்கிறது.
நி.ஒ
“ஐயா இப்போ நீங்க உங்கள் வாதத்தை அல்லது தீர்வை முன் வைக்கலாம். அதற்கு முன்னால் அரசியல் பிரபலங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு தங்களது கருத்துக்களை மிகவும் உரத்த குரலில் பதிவு செய்து இருக்கிறார்கள். அதைப்பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?”
kpp ஐயா
“அவர்களது மேதாவித்தனத்தை விடுங்கள். நான் சில விசயங்களை சில தீர்வுகளை இங்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன். இன்றைய விவாதம் கூட திசை மாறிப் போகிறது என்ற நினைக்கிறேன். இந்த தேசத்திற்கு இப்போதைக்கு கட்டாயமாகத் தேவைப்படுவது ஒரு திடமான முற்போக்குள்ள சிந்தனையும் அதைச் செயல்படுத்தும் ஆற்றலும்தான். அதை இன்றைய அரசுத்துறை அதிகாரிகள் செயல்படுத்துகிறார்களா என்றால் அது இல்லை. அரசியல்வாதிகள் சமுக பொறுப்புடன் இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. தங்களது சுயநல நோக்குடனே இருக்கிறார்கள். அதனால் எப்படி நாட்டை நல்ல பாதையில் வழி நடத்தமுடியும்..... அதனால்....”
[பிரச்சனையாகிறது இப்போது]
வேங்கை காவலன்
“நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒரு எழுத்தாளர் என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்வது நியாயம் இல்லை. அப்படியும் ஏதாவது குறை என்று இருந்தால் அதை ஆளும் கட்சி நண்பரிடம் கேளுங்கள். இது நல்ல கதையா இருக்கே....”
தாவல் சவுண்டப்பன்
“ஐயா அதிகம் படித்தவர் அதனால் தான் எங்களை குற்றம் சாட்டுகிறார். அவருக்கு அரசியல் என்னவென்று தெரியாது. வேண்டுமானால் ஒரு நாளைக்கு எங்களது இடத்தில் வந்து இருந்து பார்க்கட்டும். கவிதை எழுதுவது சுலபம். அதெல்லாம் நடை முறைக்கு சாத்தியம் ஆகாது. எனது புள்ளி விவரங்களை ஐயாவால் மறுக்க முடியுமா? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்??”
நி.ஒ.
“ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது யாருக்கும் புரியவில்லை. தாவல் சவுண்டப்பன் அவர்களின் கருத்தையோ வேங்கை காவலன் அவர்களின் கருத்தையோ முற்றிலுமாக நாம் புறக்கணித்து விடமுடியாது என்றே நன் நினைக்கிறேன். காலத்திற்குப் பொருத்தமான திருத்தமான கருத்துக்களை வழங்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று இருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் ஒரு மாணவன் எப்படி படிக்கிறான். எப்படி விளையாடுகிறான். அவனின் குண நலம் என்ன. சுயமாகப் படித்துத்தான் தேர்வு எழுதுகிறானா என்பதையெல்லாம் கவனித்து இருப்பீர்கள். அப்படி இருக்கையில் ஒரு அரசியல்வாதி என்ன சொல்ல வருகிறார் என்பதையோ அவரின் நோக்கம் என்ன என்பதையோ அறிந்து கொள்ளும் குறைந்த பட்ச ஆர்வமாவது உங்களிடம் இல்லையா என்பதுதான் எனது கேள்வி...”
தாவல் சவுண்டப்பன்
“அவரின் பதில் எனக்கு ஒரு புதிராக இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை இவ்வளவு பகிரங்கமாக குற்றம் சுமத்திப் பேசுவது எப்படி என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஏற்கெனவே நான் சொன்னதுபோல ஒரு நாளைக்காவது எங்களைப் போன்ற அரசியல்வாதியின் நிலையில் இருந்து பார்க்கட்டும். அப்போதுதான் எங்களது நிலையை அவர் உணர முடியும். கத்தி மேல் நடக்கும் வித்தை தெரிந்தால்தான் அரசியலில் இருக்க முடியும்...”
வேங்கை காவலன்
“இப்போ விளம்பர இடவேளை விடுங்கப்பா. ஒரே களைப்பா இருக்கு...”
நி.ஒ.
“நான் என்ன நினைக்கிறேனோ அதை வேங்கை காவலன் அவர்கள் வெளிப்படுத்தி விட்டார். விளம்பர இடைவேளை என்று நான் சொல்வதை அவர் சொன்னதும் புதுமைதான்... இப்போது ஒரு இடைவேளை”
நிகழ்ச்சி தொடர்கிறது
நி.ஒ.
“இப்போது நாம் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். விருந்தினர்கள் இதுவரை தமது கருத்துக்களை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்து இருக்கிறார்கள். இன்றைய விவாத மேடையின் விவாதப் பொருளான... ஒரு நிமிஷம்... அது என்னவென்று நானே மறந்து விட்டேன்.... ஹஹஹா..... அதாவது...
kpp ஐயா
“அதாவது.... இன்றைய நாட்டு நடப்பும் மக்களின் உணர்வுகளும்”
நி.ஒ
“ஐயா அவர்கள் சரியாக எடுத்துச் சொன்னார்கள். அதைப்பற்றிய கருத்துக்களை ஒவ்வொருவரும் சுருக்கமாகச் சொல்லலாம்..”
வேங்கை காவலன்
“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நாட்டு நடப்பு இவ்வளவு மோசமாக இல்லை. இப்போதைய ஆட்சி எப்படியெல்லாம் மோசமாக நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்... என்னுடைய டைரி கொள்ளை போன சம்பவமே. இதைவிட வேறு என்ன சொல்ல இருக்கிறது”
தாவல் சவுண்டப்பன்
“அவர் டைரி டைரி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அந்த டைரி என்னுடைய அலுவலகத்தில் இருந்ததுதான். அது எனக்குச் சொந்தமானது என்பதை நண்பர் மறுக்க முடியுமா? என்னுடைய கட்சியில் இவர் இருந்தபோது எனக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று விட்டார். அதை இல்லையென்று சொல்லட்டும் நான் இந்த விவாத மேடையில் இருந்து இப்போதே வெளியேறி விடுகிறேன் அல்லது எனது கட்சியில் இருந்தே வெளியேறி விடுகிறேன்...”
நி.ஒ
“கோபம் வேண்டாம். அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இது நேரடி ஒளிபரப்பு. கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.... இறுதியாக ஐயா நீங்க உங்க கருத்தை பதிவு செய்யலாம் சுருக்கமாக. ஏனென்றால் இன்றைய விவாத மேடை என்றுமில்லாத அளவிற்கு மிக அதிகமான வாதங்களையும் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தி அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது... .”
kpp ஐயா
“என்னுடைய கருத்தாக நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அதாவது நீங்கள் குறைந்த பட்சம் குறைந்த பட்சம் என்று அடிக்கடி சொல்லி விளக்கமாகப் பேசுவீர்களே அப்படி எனக்குப் பேசத் தெரியாது. நாடு உருப்பட நல்ல வழிகள் என்னவென்று ஆராய வேண்டும். ஒழுக்கத்தை அடிப்படையில் இருந்தே கொண்டு வரவேண்டும். பொறுப்பில் உள்ள எல்லோரும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட்டாலே குற்றங்கள் குறைகள் குறைய வாய்ப்பு ஏற்படும். அதைவிட....
ஐயாவை இதற்குமேலும் பேசவிடாமல் நி.ஒ குறுக்கிடுகிறார்
நி.ஒ.
நேரம் இல்லாத காரணத்தினால் ஐயாவின் கருத்தை முழுமையாக நாம் அறிய முடியவில்லை. நல்ல பல அறிய சிந்தனைகளை எடுத்து வைத்து இருந்தார்கள். அதாவது குறைந்தபட்சமாக நமக்கு அமைதியான வாழ்வும் குறைகள் இல்லாத ஆட்சியும் இருக்க வேண்டும் என்பதே ஒருமித்த குரலாக இருந்தது. என்னென்ன கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். எப்படியெல்லாம் சமூகத்திற்கான சித்தாந்தங்களை வரையறை செய்யவேண்டும். கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகிய சம்பவங்களை தடுக்கும் வழி முறைகள் என்ன என்பதையெல்லாம் விவாதப் பொருளாக இன்றைக்கு எடுத்து இருந்தோம்.. நேயர்களாகிய உங்களுக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விவாத மேடை நிகழ்ச்சியை நிறைவு செய்கிறோம். மீண்டும் ஒரு விவாதத்தில் சந்திப்போம். பங்கு கொண்ட விருந்தினர்களுக்கும் பார்த்து ரசித்த நேயர்களுக்கும் நன்றி. வணக்கம்.