கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி

காற்றெனும்
சமுத்திரத்தில் வாழும்
மீன்களென
மீன்கள் நம்மை
நினைத்துக் கொண்டிருக்கலாம் !
ஆனால்
எந்த மீனும்
இங்கே வந்து
மீன் பிடிப்பதில்லை !

===============================

உங்கள் முன்பு
தென்படும்
நம்பிக்கை
என்ற கூட்டில்
எந்தப் பறவையாவது
வாழ்ந்து கொண்டிருக்கலாம் !
உண்மை என்ற
கல்லெறிந்து விடாதீர்கள் !

===============================

அழகாயிருந்தது
என்றாலும்
வந்து தொலைக்காமலேயே
இருந்திருக்கலாம் ,
ஏற்கனவே
யாரோ எழுதிவிட்டது
போலத் தோன்றிய
நானெழுதிய
அந்தக் கவிதை !

===============================

சுவையாக இருப்பது
போன்ற
பிரமையைத் தருகின்றன
சூடாக இருக்கும்
உணவுகள் !

ஆரோக்கியம் எனும்
பிரமையையும்
தருகின்றன
சுவையாக இருக்கும்
உணவுகளும் !

===============================

மருத்துவனாவேன்
என்றான் ஒருவன் !

பொறியாளனாவேன்
என்றான் ஒருவன் !

விஞ்ஞானியாவேன்
என்றான் ஒருவன் !

விவசாயியாவேன்
என்றான் ஒருவன் !

நான்
ஓடிச்சென்று
அந்த வருகால விவசாயியைக்
கட்டிப்பிடித்து
கண்ணீர் சிந்தினேன் !

நாளையவன்
வளர்க்கப் போகும்
நெற்கதிருக்கு
என் கண்ணீர்
ஒரு சிறு
உரமாகட்டுமே !

================================

ஒற்றை பிராமணனும்
ஒரு விதவையும்
எதிரெதிரே
கடந்து போனார்கள் !
திகைத்து நின்றது
சகுனம் !

===============================

வெகுநாளைக்கப்புறம்
கண்ணில் தட்டுப்பட்டது
ஒரு
பட்டாம்பூச்சி !
அநேகமாக
எங்கள் தெருவின்
கடைசி பட்டாம்பூச்சியாக
அது இருக்கலாம் !

===============================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (24-Jul-14, 9:13 am)
பார்வை : 98

மேலே