ஆத்திகம்

ஆத்திகம் என்ப திங்கே
ஆழக்கால் அளத்தல் போலே
பாத்திரத்தின் மேன்மை காட்டும்
பக்திதான் அளக்கும் கோலே !

தெய்வத்தைத் தொழுது நின்றால்
தேய்மானம் தீரும் என்பான்
உய்வதெலாம் அவன்செய லென்றே
உணர்ந்திவன் உணர்க வென்பான் !

ஒளியுருவைக் கும்பிட் டிடுவான்
ஓமென்று சிலையைத் தொழுவான்
களிப்பிலும் கஷ்டத் திலுமே
கடவுளே என்று அழுவான் !

மாறுதல்கள் ஆயிரம் இருந்தும்
மதங்களிலே ஒன்றி ணைவான்
வேறுபாடு களைதல் ஒன்றே
வேதங்களி லெல்லாம் புனைவான் !

சாத்திரங்கள் சொல்லும் உண்மை
சங்கதிகள் உரையச் செய்வான்
நேத்திரங்கள் மூடி மெல்ல
நேர்மையினைத் தொழுதே உய்வான் !

ஆசைகள் துறந்து வாழ்தோர்
ஆசிகளைப் பெற்று வாழ்வான்
பூசைசெய்து வாழ்ந்தே புவியில்
புண்ணியங்க ளோடு வீழ்வான் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Jul-14, 9:26 pm)
பார்வை : 192

மேலே