அவளை எழுப்பிவிடாதே

தயவு செய்து அவளை எழுப்பிவிடாதே!
அவள் கேள்விகளுக்கு இன்றும் பதிலில்லை!

ஐயிரண்டு மாதமாய்,
அங்கம் எல்லாம் நொந்து பெற்ற,
தன் தாயினைக் கேட்பாள்!
தயவு செய்து அவளை எழுப்பிவிடாதே!

தன் நாட்டை,தன் நாடாக்க,
தன்னாடை துறந்த,
தன் அக்காளைக் கேட்பாள்!
தயவு செய்து அவளை எழுப்பிவிடாதே!

உறுதி கொண்டு,உள்ளம் தளராது,
உரிமையை மீட்க,குருதியுனுள் புதைந்த,
தன் தந்தையைக் கேட்பாள்!
தயவு செய்து அவளை எழுப்பிவிடாதே!

உறவுகள் எல்லாம் தொலைத்து,
ஏதும் உள்ளம் உணரா,உறங்கும்
அவளை தயவு செய்து எழுப்பிவிடாதே!

--அடுத்த அகதிகள் உணவிடும் மணி அடிக்கும்வரை!!

எழுதியவர் : பாரி (28-Jul-14, 11:55 am)
பார்வை : 89

மேலே