பெத்தமனம் பித்து
உடலையும்,உயிரையும்
ஒருசேரக் கொடுப்பது
தாயென்றால்
உயிர்கொடுப்பது
தந்தையாவார்....
தவழ்ந்த பின்னர்
விழாமல் நடக்க
வேண்டுமென
அன்னை நினைக்கிறாள்...
விழாமல் நடப்பது
எப்படியென்று
தந்தை கற்பிக்கிறார்...
உணவு ஊட்டும்போதே
அன்பையும் சேர்த்து
ஊட்டுகிறாள் அன்னை...
ஆகையால்தான் விரைவாகவே
பசியாருகிறது....
அறிவையும்,அடக்கத்தையும்
அறிவுரையில் அடக்கிடும்
அறிஞன் அப்பா..
உன்னைப்போன்று
அழகாக
உன் வாழ்க்கையை
வடிவமைத்தது அவர்களே..
அவர்களுக்கு முகத்தில்
வடிகின்ற கண்ணீரையே
நீ பரிசளித்துள்ளாய்...
உணவாக செந்நீரைத்
தந்த தாய்க்கு
கண்ணீரைத் தந்தாயே...
உயர்கல்வி பயில
பரம்பரையாக வாழ்ந்த
வீட்டையும் விற்றனர்...
உன்னைவிடுதியில் சேர்க்க
மனமின்றி
இடமாறுதலும் பெற்றனர்...
அவன் வளர்க்கும்
செல்ல நாய்க்கு
பழமும் சோறும்...
அவனை வளர்த்த
செல்லத்’தாய்’க்கு
பழைய சோறு...
ஒரே ஊரிலிருந்தும்
அவர்களை
முதியவர் விடுதிக்கு
அனுப்பினா(நா)யே..!
ஆண்டவனை வேண்டி
வரம் பெற்றனர்
உனக்கு அவர்கள்நிலை
வரக்கூடாதென்று....
பெத்தமனம் பித்து
பிள்ளைமனம் கல்லு..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
