ரௌத்திரம் பழகச் சொன்னது நீ

நிழலின் கைபிடித்து
நிஜமொன்றில் கால் பதித்தேன்..

சுற்றிலும் கருப்பினை கவ்விய
கனமான கரிய இருட்டு
பிணங்களைத் தின்று தீர்த்த
மயானத்தின் கொடூர அமைதி//

காலடியில் ஏதோ இடறிற்று
குருதி ஊறிய மண்ணில்
செத்தும் பல்லை இளித்தபடி
வெறியன் ஒருவன்//

திக்கற்ற அழுகுரல் கேட்டு
திடுக்கிட்டேன் அது
வீணான போரில்
மாண்டுவிட்ட அமைதியின்
ஆன்மாவிலிருந்து கதறல் //

மேகத் திரையென மேலெழும்
மோகக் கறைகளில்
மேனி மறைத்துக் கிடக்கிறார்கள்
விண்மீன் ஒத்த கன்னிகள் //

துளி வெளிச்சம் வேண்டி
தூக்கிலிட்டுக் கொள்கின்றன
சின்ன பெண் மண்மீன்கள் //

பூத் தொடுக்கும்
கரங்கள் தோட்டா
எண்ணக் கண்டேன்//

காப்பாற்றுவார் யாருமின்றி
தலைகீழாய்த் துடிக்கிறது
மாண்புமிகு மனிதம் //

அறியாமல் மேய்கின்றன
அரசியல் காடுகளில்
பலியாட்டு மந்தைகள் //

பால் மணம் மாறாத
இளஞ்சிறுமியர் கற்பினை
விலை பேசும் கலியுக மைந்தர்கள் //

அந்தோ பரிதாபம்!
நீதி ஆடையின்றி
நிற்கிறாள் தர்மதேவதை//

சுருக்கென்று தைத்த
கால நெருஞ்சியால்
கண்விழித்துப் பார்த்தேன்//

இரத்தம் தோய்ந்த கைகள்!
குருதி கொப்பளிக்கும் என் விரல்கள்..
நகக்கணுக்களில் எல்லாம் சதைத்துணுக்குகள்!
ஏதோ ஒன்றை பறை சாற்றின.....

அது ,
தோட்டாக்கள் புதைந்த
சோலைகளில் செங்குருதியில்
நனைந்து பிறக்கும் பூக்கள்
இனி இங்கில்லை
அன்பின் வழிகண்டு
எம் பிள்ளைகள் நடப்பார்கள்!

வெடிச் சத்தத்தில்
சிதறிய சிட்டுக்கள்
அகிம்சையின் கதகதப்பில்
பாதுக்காப்பாய் இன்று..

பலி கேட்ட அரசியல்
பழியாகிப் போன
வரலாறு விரைவில் ..

சீதையை எரிப்பதற்கும்
தயங்காத களங்கத் தீ
பெண்மையின் கரங்களில்
சுடராகிப் போனது!

நள்ளிரவில் மின்னும்
பொன்னகையுடன் விடியல்
நோக்கிப் பயணிக்கிறாள் எம்
குலப் பெண்ணொருவள்..

என் கனவுகள் மெய்ப்பட
இனியொரு தடையுமில்லை!
ஆம் !.............................................
நிஜத்தைக் கொன்றுவிட்டேன் நான் !!

எழுதியவர் : கார்த்திகா AK (29-Jul-14, 6:41 pm)
Tanglish : rowthiram pazhaku
பார்வை : 516

மேலே