மிருகத் தோல் போர்த்திய கடவுள்

கடவுளையும் , பிசாசையும்
கை கோர்த்து
இழுத்துச் செல்வதாயிருக்கிற
உனது பலிச் சோற்றுப்
படையலை
எனக்கிடாதே -
யாசித்துப் புசித்தலின்
செஞ்சோற்றுக் கடனில்
என்னை உன்னிடம்
அடகுவைக்கக்
கடவதானவொரு
சாபம் நிகழக் கூடும் !

எல்லைகளற்ற
நமது சிநேக மிகக் கொள்ளலில்
நீ மிருகமாயிருக்கிற
போது
நான் கடவுளாயும்
நான் மிருகமாயிருக்கிற
போது
நீ கடவுளாயும்
மாறுகிற
அவதாரத்தினுச்சதில்
இறை தேடும்
உயர் நிலையினூடே
இரை தேடும்
யூகிக்கவியலா உனது
ஈரவதாரக் கிளை தாவுதலில் -

ஒரு அதிபயங்கர மிருகமென
உனது கொடும் நேசத்தின்
கோரப் பரிவுப் பற்களால்
நீயென்னைக் குதறிய
பாசத் தழும்புகளில்
கசிந்த சகாயக் குருதியின்
வாதைகளைக் கூட
என்னால்
தாங்கிக் கொள்ள முடிகிறது
ஆனால் ---

கடவுளாயுனது
அருட்பாலிப்பு
ஒரு கருணையின் மழையென
என்னில் பொழிகையில்
ஒரு சொட்டு
ஈரத்திற்கேங்கித் தவித்த
எனது விதைகள்
வெடித்துச் சிதறுவதை
என்னால்
தாங்க முடியவில்லை !

உன் உவகையுடை சொற்களால்
எனதன்பின் விலங்கினை
அறுத் தெரிந்தாய் -
கட்டறுந்த துள்ளல் கன்றென
திக்குகளற்று ஓடி
இறுதியிலுனது
பேரன்பின் முன் மண்டியிட்டு
சுரக்கும் அன்பினை
காம்பு முட்டி
பாலருந்தும் இக்கன்றினை -
உன் நேசக் கயிற்றால்
கட்டிப் போட்டு
உனக்கான அன்பின் வளையத்தை
விட்டு
வெளியேற முடியாதவொரு
அடிமையாக்கி
தவிர்கவியலா உனது
வன்முறைப் பிரியத்தின்
அளப்பற்கரிய
பேரன்புப் பிளிரளால்
கர்ஜிக்கிற
கொடூர மிருகத் தோல்
போர்த்தியிருக்கிற
கடவுளுனக்குத்
தருவதற்கு
என் இதயத்தைத் தவிர
வேறெந்த
காணிக்கையும்
என்னிடம் கிடையாது .


அவதாரத்தினுச்சதில்

எழுதியவர் : பாலா (30-Jul-14, 2:27 pm)
பார்வை : 212

மேலே