கேள்வி ஞானம் -பொள்ளாச்சி அபி

அறிவென்ற சொல்லை
ஆழப்படுத்தி நிற்பது
கேள்வியெனும் ஞானம்..!

பிறந்த குழந்தையின்
அழுகை கூட
கேட்கத்துடிக்கின்ற கேள்விதான்.!

நான்குவயது குழந்தையிடம்
நாளொன்றுக்கு
நானூறு கேள்விகளாம்
புள்ளிவிபரங்கள்
புட்டு வைக்கின்றன.!

வகுப்பறையில் கேட்க
மாணவனுக்கு பிடிக்கும்,
தேர்வில் கேட்க
ஆசிரியருக்குப் பிடிக்கும்.!

சட்டமன்றமும்
நாடாளுமன்றமும்
கேள்விகளால்தான் இயங்குகின்றன.

கேள்வியெழுப்பும்
உரிமைகள் மறுக்கப்
படும்போதெல்லாம்
ஜனநாயகம் செத்துவிட்டதாக
அமளியும்,கூச்சலுமாக
வெளிநடப்புகள் நிகழ்கின்றன.!

கேள்வி கேட்கத்
துணிகின்ற சமூகமே
நிமிரத் துவங்கியது வரலாறு.!

சமூகத்தின் எழுச்சியோ
வீழ்ச்சியோ..,
கேள்விதான் அடிப்படை.!

சிந்தனையின் தொகுப்பென்பது
மனதினில் தொடரும்
கேள்விகளே.!

மிக எளிமையானதென்றும்
மிகக் கடினமானதென்றும்
பெயர் பெற்றுள்ளன கேள்விகள்.!

ஆன்மீகமும்,நாத்திகமும்
பகுத்தறியும் அறிவெனும்
விஞ்ஞானமும்..,
கேள்விகளின் விரிவுகளே.!

இந்தப் பிரபஞ்சம்
இன்னும் பல்லாயிரமாய்
சுமந்தே திரிகிறது
கேள்விகளை.!

இதுவரை பதில்பெற்ற
கேள்விகளெல்லாம்
அறிவுநிலை வளர்ச்சியென
அடையாளம் கொண்டன.!

கேள்விகளுக்கும்
மனிதர்களைப் போல
உணர்ச்சிகளுண்டு..!

அவை
கோபப் படுகின்றன.
கேலி செய்கின்றன..
தாயாக அன்பு செய்யவும்
தந்தையாக அறிவளிக்கவும்,
நண்பனாகவும்,காதலியாகவும்
இருக்கவும் பழகியுள்ளன.

ஆனால்,
கேள்விக்கு இரக்கமில்லை..,

பதில் தெரிந்ததோ..,
பொழுது போகவோ..,
அறிவின் வழியாக
கேட்பதாக நினைத்து
அறியாமை வெளிப்பட
கேட்கப்படும் கேள்விகள்..,
தம் விருப்புக்கு மாறாக
வெளிப்படும்போது - தன்
கூரிய கொக்கிகளில்
கேட்டவனை மாட்டிவிடவும்
தயங்குவதில்லையே..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (31-Jul-14, 10:10 am)
பார்வை : 191

மேலே