ஒரு தாசியின் கவிதை-வித்யா

ஒரு தாசியின் கவிதை-வித்யா

சிறுவயதில் பிடித்து
உள்ளங்கைக்குள் மூடிக்கொண்டு
அதிசயித்து அழகுப்பார்த்த மின்மினிக்கு
நிலவு விளக்கணைக்கும் எனதறையில்
வேலை இல்லை என்பதை
அதனிடம் எப்படி சொல்வது..............

வண்ணங்கள் வழி மொழி பேசும்
சிறு வண்ணத்துப்பூச்சியிடம்
எடுத்துக்கொள்ள எனக்கேற்ற நிறம்
கருமை என்பதை
அதனிடம் எப்படி சொல்வது............

பெரிதாய் எதிர்பார்ப்பில்லாத ஒவ்வொரு நாளின்
முடிவிலும் சிறு ஏமாற்றமென்பது
வியர்வை உறிஞ்சும் மின்விசிறியின்
கூர்நாக்கின் வேகம் குறைந்து புழுக்கம்
மிகுந்ததே........என்பதை
அதனிடம் எப்படி சொல்வது.........

தனிமையில் கடக்கும்
பாலைவன வீதியில்
பேரிரைச்சலோடு தீய சொற்கள்
கொண்டு என்னை விடுவிப்பேன்
எனதிந்த வலிகளோடென்பதை
எவனிடம் எப்படி சொல்வது..........

எப்படியும்
வலிகள் கொடுக்க வந்தமரும்
உயிர்க்கொள்ளிகளுக்காய் தினமும்
கிளை பரப்பிக் காத்திருக்கிறேனென்பதை
யாரிடம் எப்படி சொல்வது...........

விரைந்து வா......
யாரிடமும் சொல்லாமல்
அடுத்ததொரு வலிக்கு
ஆயத்தமாகவேண்டும் நான்............!

எழுதியவர் : வித்யா (1-Aug-14, 9:22 pm)
பார்வை : 226

மேலே