எரியட்டும் தீபங்கள் - குமரேசன் கிருஷ்ணன்

ஆழ்கடலுக்குள்
ஆரவாரமின்றி
அமைதியாய்
ஆமைகள் வாழும்
ஆயிரம் ஆண்டுகள்கூட ?
ஓர் நூற்றாண்டு
உலக வாழ்வுகூட
உத்திரவாதமற்ற
நிலையில் ?
கால்நூற்றாண்டு
கல்வியிலும்
கால்நூற்றாண்டு
கலவியிலும்
கழித்தபின் ...
இதயம் தொலைத்து
இருளான உலகினுள்
இன்னுமென்ன தேடுகின்றோம் !
பெற்ற பொருளெல்லாம்
செத்த பின்னே
தொடர்வதில்லை ...
பெத்தபிள்ளைகளும்
பிறவியெல்லாமுடன்
வருவதில்லை ...
கட்டிவைத்த கோட்டைகளும்
கண்ணீர்விட்டு
அழுவதில்லை ...
மனிதனாய் பிறந்துவிட்டால்
மரணங்கள்
விடுவதில்லை ...
ஈட்டுவைத்த பொருளெல்லாம்
இப்பிறவியிலே
அழியுமென்றால் ?
அழியாத புகழ்தேடி
அலையாதது
ஏன் மனமே ?
வெற்றுடலாய்
பிறந்துவிட்டு
வெற்றுடலாய்
மடிகின்றோம் ..
வியர்வைகளின்
வலிமறந்து
வீதியிலே
விரைகின்றோம் ...
நெற்றிக்காசுகூட
நிலையற்ற
வாழ்விற்குள் ...
பந்தமற்று
பணம் தேடி
பரிதவிப்பு ஏன் நாளும் ?
மனிதத்தை தொலைத்துவிட்டு
மதங்களை பற்றிக்கொண்டு
திக்கற்றப் பாதையிலே
தினம் நடந்தோம்
குருடர்களாய் ...
மனிதர்கள் தேடி தேடி ...
மனிதங்கள் தேடி தேடி ...
மறைந்துபோகும்
வாழ்விற்குள்
எங்கு நாமும் செல்லயினி ?
பிறப்பற்ற நிலை உணர
ஆன்மாவின் அறம் அறிய ..
நம்முள்ளே
நம்முள்ளே
ஓயாமல் பயணிப்போம் ..
வெளிச்சங்கள் தேடி ..தேடி ..
வெளியெங்கும் செல்லாமல்
விடியுமென காத்திருந்து
வீணாகி போகாமல் ..
அழியாத
அன்புகளை
அகிலத்திற்கும்
அளித்திடுவோம்...
சூரியனும் சந்திரனும்
சோர்வானால் நமக்கென்ன ?
தீக்குச்சி உரசிடுவோம்
எரியட்டும் தீபங்கள்
எப்போதும் நம்முள்ளே !