பெண்ணை படைக்காதே பிரம்மனே

வாரிசம்போல் வனப்பொன்றை வார்ப்பதிலே வள்ளல்
==வரிசையிலே தானிருக்க எண்ணியதன் விளைவாய்
பாரியிடம் கடன்எடுத்த கொடையெல்லாம் கொண்டு
==படைப்பதிலே முழுக்கவனம் செலுத்திட்ட பிரம்மன்
காரிருளில் கூரொளியை கண்களினால் சிந்தும்
==காரிகையை காசினியின் கவின்நிலவாய் செய்ய
தூரிகையால் வரைந்திட்ட தோற்றமுயிர் பெற்ற
==தூயவளைக் கண்டவர்கள் தூக்கமது தொலையும்.
நாரினிலே பூதொடுத்து நற்குழலில் சூடி
==நடமாடும் கலைகூடம் தனைகாணு கின்ற
நேரிழையர் நெஞ்சினிலே நெருப்பள்ளிக் கொட்டி
==நிரந்தரமாய் எரிவதற்கு வழிசெய்த பள்ளி
பாரினிலே இவளாக இருக்கட்டு மென்று
==பகலிரவாய் முகவதனம் பனிமலரால் செதுக்கி
வேரினிலே பழுத்தபலா விரண்டெடுத்து பதுக்கி
==விட்டானோ பின்னழகாய் விளையட்டு மென்று
ஓரிரண்டு வேண்டுமெனில் உருவத்திலி வள்போல்
==உலகத்தி லிருந்திடலா மானாலும வர்கள்
நேரிவளை சந்திக்க நேருமெனில் தங்கள்
==நெஞ்சினிலே கொண்டிருந்த பேரழகி நினைப்பை.
வேருடனே பெயர்த்தெடுத்து வீசிவிட்டு வாழ்வில்
==வீணென்று கொண்டிருந்த கர்வமெலாம் அழித்து
கோரிக்கைகள் கோர்த்தெடுத்து கோயிலுக்குள் நுழைந்து
==கொலுவிருக்கும் தெய்வம்முன் குமுறியழு வாரே!
மாரிஎனக் கொட்டுகின்ற மலையழகு வெள்ளம்
==மனதினிலே பாய்வதனால் சிலையழகின் உள்ளத்
தோரிடத்தில் கரையொதுங்கி துயில்கொள்ளத் தவிக்கும்
==துயர்கால நிலைமைக்கு பரிவென்னும் காதல்
தேரனுப்பி வைக்கத்தான் தினந்தோரும் ஏங்கும்
==தேன்வேட்டைக் காரர்கள் தே(ன்)வதையை தேடி
ஊரினிலே பைத்தியமாய் உலவுகின்ற நிலைக்கு
==ஒருதீர்வு வரவேண்டி எதிபார்ப்போர் முன்னே..
ஏரியிலே குளித்துவரும் இளங்காலைத் தென்றல்
==எழில்வதனம் தழுவுகையில் படபடக்கும் இமைமேல்
போரினிலே எதிரிகளை சாய்ப்பதற்கு அம்பை
==பொருத்திவிடும் வில்லிரண்டை புருவமென வைத்து
மோரினிலே தணிகின்ற தாகமதை மீட்டு
==மோகத்தீ உருவாக்கும் மூடுபனி மூட்டம்
பேரிகைகள் முழங்காமல் பார்வைகளால் கூட்டும்
==பெண்ணிவள்போல் பிரிதொன்றைப் படைக்காதே பிரம்மா!
வாரிசம் = தாமரை
*மெய்யன் நடராஜ்