நூலாசிரியர் திரு ஜெயப்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்து
வாழ்க்கைப் பயணத்தில்
பூக்களைப் பறிப்பவர்கள்
ஆயிரமாயிரம் இருக்கலாம்
எத்தனை பேர் தோட்டமிட்டிருக்கிறார்கள்??
எத்தனை பேர் மாலை தொடுத்திருக்கிறார்கள்??
ஈன்ற தாய் பூ இரத்தினம்மாள்,****
இங்கிலாந்து பேரரசி, முதலாம் எலிசபெத்,
இராணி மங்கம்மாள், மேடம் மேரி கியூரி,
சேவைக்கு தனை ஈந்து
அனைவர்க்கும் தாயான
அன்பு அன்னை தெரசாவென
மாமகளிர் மலரெடுத்து
மனங்கவர் மாலை தொடுத்து
ஜேபி சூட்டிட வருகின்றார்
அனைத்து சுற்றங்களழைத்து...
வாழ்ந்தார் இவரென்று கூறும் வண்ணம்
வாழ்கின்ற நாட்களில் அடையாளங்களை
விட்டுச் செல்பவர்தான் எத்தனை பேர்??
இதோ காலங்காலமாய்
நின்று பேசப் போகும் அடையாளங்களாய்
கல்வெட்டுக்களாய்...கைதொடும் புத்தகமாய்...
பயணங்கள் சொல்லும் நூலதுவும்
வரலாற்றுப் பெண்மணிகளின்
வாழ்க்கைத் துளிகளோடு
ஜேபி அவர்கள் வாழ்ந்த காலம் கூறும்...
"வெளிநாடு செல்ல கிடைக்கவில்லை
விசாவும் பாஸ்போர்ட்டும்"
அங்கலாய்த்துக் கொள்பவர்களுக்கு
விசாவின்றி பாஸ்போர்ட் இன்றி
பறவைகள் போல் ஒரு பயணம்...
புத்தக விமானத்தில்
அழைத்துச் செல்ல காத்திருக்கிறார்
ஆயத்தமாகுங்கள்
ஐரோப்பிய பயணத்திற்கும்
அரேபிய பயணத்திற்கும்.....
எழுத்தினில்தான் எத்தனை வித்தைகள்??
கண்முன்னே காட்சிகள் விரியும்
படித்த இடத்திலேயும்
பிடித்த இடத்திலேயும்
கால் பதித்தது போல் உணர்வு.....
எழுத்தாள வித்தகருக்கே தனி சிறப்பு...
ஆண்டவர் நாட்டினிலும்
நம்மை ஆண்டவர் நாட்டினிலும்
வாழ்ந்தவரோடு வாழ்ந்தது போல்
எண்ணம் கொள்ளச் செய்து
அனைவரையும் இட்டுச் செல்லும் சிறப்பு
ஜேபியவர்களின் எழுத்தோ ஜொலிப்பு..
ஈன்றவளின் பெருமை சொல்லும்
ஏடதனை எத்தனை பேர் தருகின்றார்??
அன்புத்தாய் பெருமையெல்லாம்
அழகழகாய் சொன்னதோடு
அன்னையவள் பிரிவினிலே தாளாமல்
பெய்த ஒரு ஒப்பாரி மழை
பொய்ததுவும் ஓர் அடலேறு
அடலேறு சோகம் கண்டு
உருகாத மனமுருகி
ஊற்றெடுக்கும் விழிகளிலும்...
ஆசிரியர் அழும்போது அழவைத்து
சிரிக்கும்போது சிரிக்கவைத்து
எழுத்தினிலே ஈர்ப்பு வைத்து
காந்த சக்தி படைப்புகளாய்
பயணக் கட்டுரைகள் பொலிவோடு
இனி உங்களின் கையோடு....
நூலாசிரியர் காணாத இடங்கண்டு
பிறர் களித்திடவே படைத்திடுவார்
புத்தகங்கள் பல சிறப்புடனே
நாம் பறந்திடவும்... பயணிக்கவும்...
பயணத்திற்கு தயாராகுங்கள்
இமைச் சிறகுகளை விரித்துக்கொண்டு
பயணத்தின் துணையாகும் அன்னாரை
வாழ்த்திடுவோம் நல் உளம் கொண்டு....
வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி.
=======================================================================================
எனது அலுவலகத்தில் பணிபுரியும் எனது தோழி திருமதி தமிழரசி அவர்களின் கணவர் திரு ஜெயப் பிரகாசம் அவர்கள் ஐரோப்பிய அரேபிய பயணங்கள் மேற்கொண்டு எழுதிய இரண்டு பயண கட்டுரை நூல்களும் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு சில மகளிர் பற்றிய ஒரு நூலும் ஆக 3 நூல்கள் வெளியீட்டு விழா 18.07.2014 அன்று சென்னையில் உள்ள வாணி மகால் அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நான் வாசித்த வாழ்த்தினை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சியே. )
****பூ இரத்தினம்மாள் = நூலாசிரியரின் தாயார் ஆவார்
======================================================================================