மேகம்

வானம் பெற்றெடுத்த
--------வயிற்றுப் பிள்ளைகள்
தானம் கொடுக்கும்
--------தண்ணீர் வள்ளல்கள்

மழைநீர் சுமக்கும்
--------மாபெரும் நத்தைகள்
இழைகளாய் தொங்கும்
--------இயற்கை மெத்தைகள்

நீலவான் உடலின்
--------நிலையில்லா வீக்கங்கள்
காலம் சிறைபிடித்த
--------கைதிகளின் கூட்டங்கள்

இடிந்து விழுந்த
--------கோட்டைச் சுவர்கள்
ஒடிந்து தொங்கும்
--------ஒட்டடை கும்பல்

வெண்மையாய் தெரிகின்ற
--------அதிசய மச்சங்கள்
விண்மீன்கள் துப்பிவிட்ட
--------எச்சலின் மிச்சங்கள்

நகைத்துக் கொண்டிருக்கும்
--------நரைத்த கூட்டங்கள்
புகைத்துக் கிளம்பிய
--------பனிமழை மூட்டங்கள்

வடிந்து போன
--------வானக் கடலின்
படிந்து கிடக்கும்
--------நுரைகளின் குவியல்

ஓடை வானத்தில்
--------ஒதுங்கிய பாசிகள்
ஆடைகள் கட்டி
--------ஆடிடும் ஊசிகள்

பரந்து கிடக்கும்
--------போர்க்கள வானில்
எரிந்து கிடக்கும்
--------எலும்புக் கூடுகள்

தொலைவில் நிற்கும்
--------தண்ணீர் மங்கைகள்
அலைகள் அடிக்காத
--------ஆகாய கங்கைகள்

சொர்க்மாய்த் தெரியும்
--------சுதந்திர தேவிகள்
மர்மமாய்த் தெரியும்
--------மயான ஆவிகள்

அடைந்து கிடக்கும்
--------ஆழ்கடல் வானில்
உடைந்து கிடக்கும்
--------ஓட்டை படகுகள்

நிலத்தில் வாழ்வோர்க்கு
--------நீர்த்தூது அனுப்பி
நலம் விசாரிக்கும்
--------விண்வெளி சொந்தங்கள்

கண்ணில் தெரிந்த
--------கடவுளின் சக்திகள்
என்னுள் பிறந்த
--------கற்பனை யுத்திகள்

எழுதியவர் : ஜின்னா (7-Aug-14, 3:29 pm)
Tanglish : megam
பார்வை : 2807

மேலே