அப்பா என்னும் ஆலயம்-அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டி

உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்…

என் வானத்துச் சூரியன் நீ...
உனக்கு தெரிந்த உலகமே நாந்தான்...
என் தோட்டத்து மழையும் நீ...
உன் சேமிப்பு கடலே நாந்தான்…

தீபாவளி, பொங்கல் எனக்குத் தெரிந்து,
துணி எடுக்கும் பண்டிகைகள் இரண்டே;
மூன்றாவது பண்டிகையை அறிமுகம்
செய்துவைத்தாய்….என் பிறந்தநாளை;

விவசாயம் சொல்லிக்கொடுத்தாய்…
என்னை பூ பறிக்கச் சொல்லிவிட்டு
முள்வெட்டி வேலியடைத்தாய் நீ...

அம்மாவிடம் நீகாட்டும் ஒரே அதிகாரம்
பழையதை எனக்கு போடு
பையனுக்கு இட்லி போடு

பள்ளியில் பாடம் பெற்றேன்...
உன்னிடம்தான் வாழ கற்றேன்….
என்பயணத்தின் திசைக்காட்டி நீ
போகும் வழியில் நிழலும் நீ

இளமை தொலைத்த முகத்தின் ரேகையெல்லாம்
என் எதிகாலம் சொல்லுதப்பா…..
நான் வாழப்போகும் இந்த வாழ்க்கையில்
அடித்தளமும் படிக்கல்லுமானாய் எனக்காய்….

என்கல்வி என்னை கைவிடினும்
உன்னை கைவிடேன் அப்பா..
வேறெங்கும் நான் தொழேன்
அப்பா என்னும் ஆலயம் தவிர…

எழுதியவர் : பசப்பி (10-Aug-14, 4:26 pm)
பார்வை : 172

மேலே