உன் விரலுக்குள் என் வாழ்வு

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ
கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்
உன் சிரிப்புகளில் சில்லறை சிதறியதோ இல்லையோ
உன் தாயின் வேதனைகள் சிதறியதடா
உன் குறும்புகள் ஒவ்வொன்றும்
தித்திக்கும் கறும்புகளடா
உன் கால் தடங்கள் எல்லாம்
என் வாயில் கோலங்களடா கண்ணே
நீ படிக்கையில் உன் விரல் பிடித்து
நானும் பாடம் படித்தேன்
நீ சிரித்தால் சிரித்தும்
நீ அழுதால் அழுது
என் மாளிகையின் அலங்கார கண்ணாடியடா நீ
நான் வளர்த்தப் பாசத்தீயில்
உன் வாழ்க்கைக் கருகக்கூடாதென்று
மேற்படிப்புத் தொடர மவுனமாய்ப் பிரிந்தேன்
அயல்நாட்டிலிருந்து நீ அழைக்க
ஆவலுடன் காத்திருந்தேன்
நாட்கள் ஒவ்வொன்றும் யுகங்களாய்
நிமிடங்கள் ஒவ்வொன்றும் ஆண்டுகளாய்
நொடிகள் ஒவ்வொன்றும் மாதங்களாய்
நீண்டதடா என் செல்வ மகனே
எனக்குப் பிறகு உன்னைக் கவனிக்க
இன்னொருத் தாயும் தேடித்தந்தேன்
மங்கலங்கள் உன்னைச் சூழ
என்னை மட்டும் இருள் சூழ்ந்ததடா
என் இறக்கைகள் விரிக்கப்பட்டது
பறந்துக் கொண்டிருக்கிறேன் விண்ணில்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (10-Aug-14, 6:11 pm)
பார்வை : 141

மேலே