அன்புள்ள அப்பாவுக்குஅமரர் சுசிலா மணி நினைவுப் போட்டிக் கவிதை
உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ
கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்
ஒரு உலகம் சமைக்க
இந்த சின்ன பூ பிறந்த நாளுக்கு
செந்தூரப் பூவில் வீடு கட்டட்டுமா என்பாய்
வான்பிறையை கொண்டுவந்து
வாசலில் தோரணமாய் ஒட்டட்டுமா என்பாய்
என் செல்லச் சிணுங்கல்களில் நீ சிலையாவாய்
சிறுகம்பு கொண்டு நானடிக்க மீண்டும் உயிர் பெறுவாய்
அப்பா நீ அவதாரம்: அரிதாரம் பூசாமல் கொள்வாய் தசாவதாரம்
ஓடச்சொல்வேன் பரியாவாய் : தேடச் சொல்வேன் நரியாவாய்
அசையும் யானை அம்பாரம் நீயெனக்கு :
ஆட நீயிருக்க அந்த தஞ்சாவூர் பொம்மை எனக்கெதற்கு
எழுத்து லிபிகளில் கணிக்க முடியா மொழியென்பாய் என்குரல்
உண்மையில் நான் சொல்வேன்:
எந்த அகராதியும் மொழிபெயர்க்க முடியாதது
உன்னன்பெனும் பரல்
உன்மன ஆழத்தில் என்னை உழுது விதைத்தாய்
உன்னால் என் சின்ன உலகத்தில்
எல்லாச் செடிகளும் பூ பூத்தன
பிரியமான உன்னை நினைத்து வானத்தைப் பார்த்தேன்
வானம் பூமழை பொழிந்தது .
என்பேனாவின் முனை என்னையறியாமல் எழுதியது
``அப்பா உன்னை ஆராதிக்கிறேன் “.
மறுபிறப்பு ஒன்றில்
மறுபடியும் நாம் பிறக்க வேண்டும்
மகனா(ளா)க நீயும் தந்தையாக நானும் வந்து
தோளில் உன்னை சுமக்க வேண்டும்.