உன் விரலுக்குள் என் வாழ்வு

உன் விரலுக்குள் என் வாழ்வு….
எனது நடைவண்டி நீ….
கரிசன களிம்புக்காரன் நீ….
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்…..

எனக்காய் உன் இளமைதனைத் தொலைத்தாய்
உன் இனிய ஆசைகளைத் தொலைத்தாய்
இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தாய்
தாய்க்கும் தாயாகி தாயுமானவனும் ஆனாய்

தாயே உயிர் சுமந்தாள்; தாயே உயிர் தந்தாள்
தந்தைநீயோ கருத்துடனே என் தாயைக் காத்திட்டாய்
மனையையும் காத்திட்டாய்; மக்களையும் காத்திட்டாய்
மாரிபோல் பயன் கருதாது ஓயாமல் உழைத்திட்டாய்

அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு
அன்பும் அறனும் நிறைந்த இல்வாழ்வில் எங்கள்
அறிவுக்கண் திறந்திடவே அயராமல் பணம் சேர்த்தாய்
அவையனைத்தும் போதாமல் வங்கியிலும் கடன் பெற்றாய்

ஒருவயதானவுடன் ஒளிரும் வண்ணப் பொம்மைகள்
மூன்றுவயதானவுடன் மூணு சக்கர வண்டி
ஐந்துவயதானவுடன் பள்ளிப் புத்தகங்கள்
பத்துவயதானவுடன் பாங்குடனே மிதிவண்டி

இவையனைத்தும் பரிவுடனே வாங்கியே தந்திடுவாய்
இன்னமும் தேவை என்றால் இல்லையென்று கூறமாட்டாய்
இருபது வயதானவுடன் கல்லூரிக்கு அனுப்பிவைத்தாய்
இணையமுள்ள மடிக்கணினி வாங்கிடவே இசைந்திட்டாய்

பட்டம் முடித்தவுடன் வேலைக்கு அனுப்பிவைத்தாய்
பலஇலக்கச் சம்பளத்தைக் கண்டதுமே மகிழ்ந்திட்டாய்
ஊன்றுகோல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியிலே நீ திளைத்தாய்
ஓயாமல் உழைத்ததன் பயனை நீ அடைந்துவிட்டாய்

என்நலனே பெரிதென்று நீ இருந்துவிட்டாய்
உன் நலனை நான்பேண வாய்ப்பொன்று நல்கிட்டாய்
தள்ளாத வயதினிலே தளர்ந்துபோன நடையுடனே
திண்டாடும் உன்விரலை நான் பிடிப்பேன் இனிமேலே

இனி என் விரலுக்குள் உன்வாழ்வு
கலங்காதிரு தந்தையே! காத்திடுவேன் உனையென்றும்

எழுதியவர் : ராசி (10-Aug-14, 7:34 pm)
சேர்த்தது : ராசி
பார்வை : 98

மேலே