அன்பின் உருவாய் நீ -அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டிக் கவிதை

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ
கரிசன களிம்புக்காரன் நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்

என் இமைகளின் துடி துடிப்பில்
உருகி வழிந்திடும் கண்ணீரின் தித்திப்பும்
கலங்கிய நீரின் உவர்ப்பும்
விழியசைக்காமலே அறிவாய் நீ

உன் மனம் கனக்கும் சுமையிலும்
சுகமான மயிலிறகால் வருடும் மென்
சொற்களை வலியிலிருந்து வலியக்
கற்றாயோ இச்சிறு மகளிற்காய்

நம் செல்லச் சண்டைகளின் முடிவில்
விட்டுத்தரவே மனம் வருவது இல்லை
ஏனென்றால் நான் உன்
சாயல் கொண்டவள் அன்றோ

விண்மீன் பறித்துத் தாவென அழும்போது
கண்ணுறங்காமல் கதை சொல்லி என்
சிரிப்பில் நட்சத்திரங்களுக்கு நல்வரவு
கூறிய சந்திரன் நீ

உன் தாயைப் போன்றவள் நானென்று
நீ பெருமிதம் கொள்ளும் தருணங்களில்
உறவை மறந்து என் பிள்ளையாகவே
மாறிவிடுகிறாய் அப்பா நீ !!

நொடிக்கு நூறுமுறை என்னை அழைக்கும்
உன் குரல் என் செவிகளுக்கு
எட்டாத சுடும் தொலைவில்
எங்கோ கண்மறைந்து வாழ்வதற்கு
உன் மகளாகவே உன்னுடன் இருந்து
அன்பில் மடிந்துபோக ஆசை கொண்டேன் !!

எழுதியவர் : கார்த்திகா AK (10-Aug-14, 11:38 pm)
பார்வை : 140

மேலே