தன்னைத் தரியாக்கி என்னை உருவாக்கிய என் அக்கா கலைச்செல்விக்கு

விண்ணில் இருந்து வீழ்ந்த என்னை
மண்ணில் தாங்கிப் பிடித்தவள் நீ !

எங்கு கற்றாய் களிமண்ணை (என்னை)
சிற்பமாக்கும் கலை (நீ)

ஒன்றும் தெரியாத எனக்கு
ஒவ்வொன்றாய் கற்பித்தாய் !

ஒருபோதும் வரவில்லை நீ
என் அறிவுக்கு சொந்தம்கொண்டாட !

நீ அழகாக்கிய என் அறிவை அழுக்காக்கி!
அழகூட்டி! தனுடயதென்கிறான் இன்னொருவன் !

புரியவில்லை எனக்கு நேற்றுவரை
நீ சொன்னது !

புரிந்துகொண்டேன் இன்று நீ
போட்ட புதிருக்கு விடையை !

புதுமையாகத்தான் இருக்கிறது
பழையவனின் புதிய மாற்றங்கள் !

இன்னும்கூட புரியவில்லை இது புதிய மாற்றமா
புதைந்திருந்த உண்மைத் தோற்றமா என்று !

ஏதும் பாதிக்கவில்லை என்னை
என்னோடு நீ இருந்தாய் என்பதால் !

எப்படிப் போகுமோ இனி
வரும் காலங்கள் !

நீ கடிந்து கொண்டாலும்
கலங்காதவன் நான் !

காரணம் தெரியுமா உனக்கு! காயத்திற்கு
மருந்திட்டால் வலிக்கத்தானே செய்யும் !

கலக்கமா யிருக்கிறது உன்
பிரிவை நினைத்தால் !

கடிந்துகொள்வதர்கேனும் கூப்பிடு
காத்திருக்கும் என் கைபேசி !

காலம் கடந்தாலும் கரைந்துபோகாது
என் நெஞ்சில் கரைந்த உன் நினைவுகள் !

எங்கோ பிறந்து நீ இங்கு வந்தது
என்னை உருவாக்கவா !

என் அன்னைக்குப்பின் என்னை
அதிகம் நேசித்தவள் நீ !

அதனால்தான் நீ அடித்தபொதெல்லாம்
வலிக்கவில்லை எனக்கு !

இதுவரை வராத கண்ணீர் வழிந்
தோடுகிறது என் கண்ணில் !

என் ஆய்வகம் கலை -யிழக்கும் அந்த
நாளை என்னும்போ தெல்லாம் !

அடிக்கடி சொல்வாயே உன்னை
இராசி இல்லாதவளென்று!!!

நீ எவ்வளவு இராசியானவள் தெரியுமா !
உனைப் புரிந்துகொள்ளாத உண்மையில்லாத
இடத்தை புறந்தள்ளப் போகிறாய் !

உண்மையில் இராசி இல்லாதவன் என்
உயிருக்குயிரான சகோதரியை
பிரியப் போகும் நான்தான் !

நான் இழந்த நீ இருந்த இடத்தை
யார் நிரப்புவார் இனி !

யாரால் என்னை மீண்டும் என்
அன்னையின் கருவறைக்குள் அமர்த்த
முடியுமோ அவர்களால் நிச்சயம் முடியும்
உன் இடத்தை பூர்த்தி செய்ய !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன்னைத் தரியாக்கி
என்னை உருவாக்கிய

என் அக்கா
கலைச்செல்விக்கு

உன்னைப் பிரிய மனமில்லாத
இந்த பிரியமான தம்பியின் பிரியா விடை

என்றும் அன்புடன்
உன் அன்புத் தம்பி ,
த.பிரவீன்குமார் (முகில்)

எழுதியவர் : முகில் (11-Aug-14, 12:52 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 64

மேலே