என் கடைசி மூச்சும் கார்கிலுக்கு

=======================================================================
தள தோழமைகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள்....

(நம் தாய் நாட்டைக் காத்துகொண்டிருக்கும் போர் வீரர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்...
கார்கில் எல்லையில் காவல் நிற்கும் ஒவ்வொரு போர் வீரரின் இதயத் துடிப்புகளே இந்த கவிதையில்.... )
=======================================================================

வந்துவிழும் அணுகுண்டை
-----------வெடித்தென்னை சிதைக்கச்சொல்
இந்தியத்தாய் உன்மடியில்
-----------இறந்துவிடத் துடிக்கின்றேன் !

ஏவுகனை எனைவீழ்த்த
-----------எதிர்நோக்கி வந்தாலும்
சாவுக்கு அஞ்சாமல்
-----------சிரிப்பதற்கு முயற்சிப்பேன் !

என்மீது தீவிழுந்து
-----------எனைஉருக்கி எரித்தாலும்
என்பூமிதாய்மண்ணை
-----------இழந்து விட மாட்டேன் நான் !

சரஞ்சரமாய் குண்டுகளென்
-----------சதைக்குள்ளே புகுந்தாலும்
சரணடைய என்நாட்டைச்
-----------சத்தியமாய் விடமாட்டேன் !

கட்டில்சுகம் உள்ளதென
-----------காதோரம் சொன்னாலும்
நட்டநடு இரவிலும் நான்
-----------நாடுகாக்கச் சென்றிடுவேன் !

ஒருநாள் வாழ்ந்தாலும்
-----------உயிர்கொடுத்த மண்ணே உன்
திருமுகம் பார்த்துக்கொண்டே
-----------செத்தொழிந்தும் போவேன் நான் !

நரம்புகளால் இமயத்தை
-----------நான்போர்த்திக் காப்பதற்கு
மரணத்தைக் கம்பளியாய்
-----------மாற்றிடவும் சம்மதமே !

என்வீட்டைப் பிரிந்துவந்த
-----------ஏக்கங்கள் இருந்தாலும்
என் நாட்டைக் காப்பதற்கு
-----------எதையும்நான் இழந்திடுவேன் !

கொட்டுமழைச் சாரலிலும்
-----------குடைபிடிக்க எண்ணாமல்
சட்டென்று வரும்போரைச்
-----------சந்திக்கச் செல்வேன் நான் !

எதிரிகளால் சுடப்பட்டு
-----------எனது உடல் சரிந்தாலும்
உதிரத்தால் முத்தமிட்டு
-----------உயிர்கொடுப்பேன் மண்ணிற்கு !

துப்பாக்கி சுமக்கும்என்
-----------தோள்களினால் முடியுமெனில்
எப்போதும் தாய்நாட்டை
-----------ஏந்திக்கொண்டு நின்றிருப்பேன் !

படையோடு செல்லும்நான்
-----------பாதியிலே இறந்தாலும்
கடைசியிலே விட்டமூச்சும்
-----------கார்கிலுக்குச் செல்என்பேன் !

எழுதியவர் : ஜின்னா (13-Aug-14, 9:41 am)
பார்வை : 218

மேலே