பட்டாம்பூச்சியைத் துரத்தும் சிறுமி

பிடிக்க முற்பட்டபோது
ஒரு சிட்டுக்குருவியென
பறந்து போனது
அது !

தேமே
என்றிருந்தபோது
ஒரு புறாவென வந்து
தோளில் அமர்ந்தது
அது !

ஒரு
கவிதையாகவோ,
ஒரு
காதலாகவோ,
வாழ்க்கைப் புத்தகத்தின்
விடுபட்டுப்போன
ஒரு பக்கமாகவோ,
அது இருக்கலாம் !

================================

சில வெளிப்படையான
பெரும் சப்தங்களைவிட
சில இரகசியமான
மெல்லிய சப்தங்களே
அதிகமாய் இம்சிக்கின்றன
காதுகளை !

================================

இறக்கிவிடுவதென்பது
ஏணிகளின்
மறுபக்கம் !

================================

ஒரு
அதிகாலைப்பறவை
அதன்மொழியில்
பாடிக்கொண்டிருந்தது !

" அருமையாகப் பாடுகிறாய்
பறவையே "
என்றேன் !

நான் சொல்வதைக்
காதில் வாங்காமல்
அது பாடிக்கொண்டேயிருந்தது !

" ஏ பறவையே
சொல்வதைக்கூடச்
செவிமடுக்காமல்
என்ன திமிர் உனக்கு "
என்றேன் !

நான் சொல்வதைக்
காதில் வாங்காமல்
அது பாடிக்கொண்டேயிருந்தது !

================================

சேவல்களின்
கொக்கரக்கோ ..........!

கோழிகளின்
கொக் கொக் கொக் ..........!

கொட்டகை மாடுகளின்
ம்ம்மாஆஆஆ.............!

வாசல்கூட்டும்
சரக் சரக் ................!

சாணம் தெளிக்கும்
சளக் சளக் ...........!

காற்றில் மிதந்துவரும்
விவித்பாரதி !

என
இவ்வாறு
விடிந்துகொண்டிருந்த
என் அதிகாலைப் பொழுதுகளை
நாட்குறிப்பிலாவது
ஆவணப்படுத்தி
வைத்திருந்திருக்கலாம் !

ச்சே !

================================

எதிரே வந்த
அவனுக்காய்
வழிவிட்டு
நானும்,
எதிரே வந்த
எனக்காய்
வழிவிட்டு
அவனும்,
ஒருசேர நின்றதில்
ஏற்பட்ட
அந்தக் கணநேர இடைவெளியில்
முட்டிக்கொள்கின்றன
எங்கள் புன்னகைகள் !

================================

அதையெப்படி
வெல்வது ?
இதையெப்படி
வெல்வது ?
என்று திட்டமிட்டபடியே
போய்க் கொண்டிருக்கிறேன் !
ஒரு பட்டாம்பூச்சியைத்
துரத்திக்கொண்டே
தன் புன்னகையால்
உலகையே வென்றபடி
கடந்து ஓடுகிறாள்
ஒரு சிறுமி !

================================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (14-Aug-14, 6:31 pm)
பார்வை : 111

மேலே