பிறந்தநாள் பிறந்த கவிதை
இன்று அறுபத்தி மூன்று!
நாயன்மார்கள் நீள் வரிசை அல்ல
நான் தாண்டிய வருடக் கணக்கு
நாளைப் போற்றுவோம் நல் இதயங்ளே!
இது முதுநிலை அருகாமை அன்றோ
இதுவரை கடந்து எதைப் பார்த்தோம்
இனிவரும் நிலையில் எதைக் காண்போம்
என ஒரு எண்ணம் எனை முட்ட
நான் என உணர்ந்து நடை நிமிர்ந்து
என்னைச் சுற்றி ஒரு வட்டம் வளர்த்து
மனைவி மக்கள் பேரன் பேத்தி
நினைவு நிற்க இவை போதுமோ
அறிவால் வளர்ந்தேனோ அறிந்து வளர்ந்தேனோ
பரிவால் எனை பலர் வளர்த்தனரோ
குற்றம் குறை போற்றாமல் எனை
சுற்றம் சூழ பாது காத்தனரோ
சிறு வயதிலிருந்தே சினம் கொள்வேன்
சிறிதும் தயங்காமல் வார்த்தை வீசுவேன்
நாவால் சுட்ட நபர்கள் யாவரும் நான்
நோயால் பட்டால் கிட்டவா நிற்பர்
வயதின் முதிர்வால் வாய் கட்டினேன்
வார்த்தை எண்ணிக்கை பல குறைத்தேன்
நன்மைகள் பல செய்திலன் ஆயினும்
தீமைகள் சற்று குறைவே செய்தேன்
பொய்கள் என்றும் சொல்வதில்லை ஆனால்
உண்மைகள் உரைப்பேன் என உறுதியில்லை
தில்லா லங்கடி வாழ்வில் முன்னேற
தில்லு முல்லு என்றும் துணை நாடவில்லை
இல்லற நல் வாழ்வுக்குத் தேவை
சில்லரை என நன்குணர்ந்து சேமிப்பு
கல்லரை வரை நீள கடின உழைப்பு
நல்லவர் என போற்ற நாலு காசு
உள்ளவரை உலகம் போற்ற பாக்கெெட்
பள்ளம் மிக ஆழம் தேவை
எள்ளளவும் ஐயம் வேண்டாம் இதை
நாளும் நாம் உணர்தல் நன்று