இவன் செய்யாத சேவைகள்

அன்பான மனைவி
அழகான குழந்தை
அளவான வரவு
சில்லறையில் செலவு

இல்லறவாசலுக்குள்ளே
நான் கண்ட ஆனந்தம்
தினமும் நன்றி நவில்கிறேன்
இந்த குடும்பவாழ்வுக்கு

இல்லறம் தாண்டி
தவறாமல் காணும் சோகம்
இதயகூட்டிலே தீராத
சுமைகொண்ட ஓலம்

சாணக்கியர்களை பெற்றெடுத்த
பூமியிலே சண்டைகளுக்கு
மட்டும் பஞ்சமில்லை
மதிகெட்ட மதவாதிகளால்

பணத்தை காக்கும்
பணக்காரன் வீட்டின்முன்னே
பட்டினியுடன் பாத்திரம்
ஏந்தும் பாவம்

சகோதிரிகள் இருந்தும்
பெண்ணின் அவலம் அறியா
சதைபின்ன துடிக்கும்
சில அரக்கவம்சங்கள்

யாரோ ஒருவன்
ஒய்யார வாழ்க்கை வாழ
பலியாகுதே பிஞ்சுகள்
எரியுண்ட கட்டிடத்துகுள்ளே

அத்தனையும்
கண்ணு பாக்குது
காது கேக்குது
மனசு துடிக்குது

உறவு தடுக்குது
உண்மைய பார்த்தா
ஊமையா போயிடு
உயிரோடு வந்துடுன்னு

என் மறைவுக்குப்பின்
என் கல்லறையிலாவது
எழுதுங்கள் நான் சமுதாய
உணர்வுள்ளவன் என்று

பொய்யாவது சொல்லிடுங்க
என் சந்ததியிடம்
இவன் செய்யாத சேவைகளை
இவன் கேட்காத கேள்விகளை

குருதியின்வழி
இல்லாத உணர்வுகள்
பொய்கேட்டு பொங்கட்டும்
வாய்விட்டு கேட்கட்டும்

நான் வாழ்ந்த வாழ்க்கை
வேண்டாம் அவர்களுக்கு
பந்தபாசம் தாண்டி
சமுதாயபரிவு கொள்ளட்டும்

நான் காட்சிகொண்ட
என் சமுதாய கண்ணீரை
அவர்களாவது துடைக்கட்டும்
நெஞ்சில் ஈரத்தோடு

எழுதியவர் : சிவா (17-Aug-14, 1:08 am)
பார்வை : 100

மேலே