சிந்தனை சிகரங்களின் சுற்றுலா சுருக்க குறிப்பேடு

கதிரவன் கரம் கொடுக்க
காட்டிருள் வழிவிடுக்க
நட்பு வட்டார்களின்
வளைக்குள்
சிந்தனை சிகரங்களின்
சுற்றுலா சுபீட்சமாய்
ஆரம்பித்தது.

தத்தெடுத்த தாய் தரணியாய்
இருக்க – ஒண்டுவிட்ட
சகோதரங்களின்
புலங்காகிதத்தோடும்
சமவுரிமையோடு
அக்பரின் முன்னால் எங்களுக்காக
ஒரு சில வினாடிகள்
காத்துக் கொண்டிருந்த பேருந்தில்
எங்கள் குழுவும்
அகமென்னும் மனமகிழ
ஏறினோம்.
அது பேருந்தின்; வாசல் படியல்ல
சொர்க்கத்தின் வரவழைப்பு படி
எங்கள் தோழர்களின்
ஆரவாரத்தில் அன்றைய தினம்
அக்பரும் ஆட்டம் கண்டிருக்கும்.





கடவுள் ஸ்துதிக்கு தேங்காய்
காத்துக் கொண்டிருக்க
கோயிலுக்காக கடவுள் காத்துக்
கொண்டிருப்பது போல்
செல்லும் வழியில் கோயில்
அடையாளங்களின் உரு மட்டும்
தெரியவில்லை – கொஞ்ச தூரம்
செல்ல அத்தி பூத்தாற் போல
ஓர் ஆலயம்.
அது ஓர் ஆ லயம்.

தேங்காய்கள் சிதர
கற்பூர ஆலத்தியுடன்
எங்கள் நட்பு வட்டாரங்களின்
ஆட்டங்கள் ஆரம்பித்தன.
அது என் வாழ்வில்
கண்டிராத இன்னுமோர்
சொர்க்கஸ்தலம்.

வளைந்து சென்ற பேரூந்தின்
கர்ப்பகிரக மூலையில்
சாரதியின் கரங்கள்
வளையத்தை வளைக்க
அதற்கு தக ஆட்டத்தை
ஆடிய எங்கள் நாடக
வித்தகர்களின் நடனம்
சொல்லத் தகுந்ததல்ல.

மலையால் சிறை அடைக்கப்பட்ட
நுவரெலிய மண்ணையும்
பழுத்த கிழவியின் தலைவிரி
கோலம் போல்
நீர்வீழ்ச்சிகள் நிறைந்த
பதுளை மண்ணையும்
கதிர்காம கந்தனின்
கருணை மழையையும்
காணக் காண
எங்களின் கண்கள் மட்டுமல்ல
அலை என்னும்
மனமும் மலைத்துப் போய்;
ஒரு சில நிமிடங்கள்
அசைவற்றிருந்தன
வியப்பெனும் வியப்புக்குறியால்.

ஓவ்வொரு பிரதேசமும்
தேசியம் என்ற
தோட்டத்துக்குள்
மலிந்திருப்பதை
சென்ற பாதச்சுவடுகள்
பதிவுகள் தந்தன.

இரண்டு நாள் பயணம்
அது பயணம் அல்ல
பம்பரம்.
துடிக்கும் நெஞ்சுக்குள்
தொத்திக் கொண்டு
வரும் நினைவலைகனோடு
சுதந்திர சுற்றுலாவை
கண்டிருந்தோம்.

ஆட்சியின் மோகத்தால்
தார்மாராய் போட்டிருந்த
தார் ரோட்டுகளின்
நடுவில்
உப்பை விற்று பிழைப்பு
நடத்தும் நாடோடிகள் சுழல
அம்பாந்தோட்டை
ஆரம்பித்தது.

இது ஈழத் தலைவனின்
பிறப்பிடம்
என்பதால் ஆங்காங்கே
சில அனாவசிய
ஆடம்பரங்கள்
அதிகமாய் தெரிந்தன.

கடல் தாயின் அமைதியை
கசடறக் கற்க
சென்ற சில கரையோர
பிரதேசங்களின் பிதற்றுதல்களை
பிழைப்பு நடத்தும்
உழைப்பாளிகளின் கரத்தைக்
கொண்டு கணக்கிடலாம்.
சுற்றித் திரிய மட்டுமல்ல
கற்றுத் தெளியவும் அனேக
அடையாளங்களைத் தந்த
சிந்தனை சிகரங்களின்
சுற்றுலா பயணம்
இறந்தாலும் மறக்கமுடியா
சம்பவ ஏடு
அது ஒரு சரித்திர ஏடு.






கோபனா பார்கவி
தமிழ் சிறப்புத்துறை
2ம் வருடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்.

எழுதியவர் : GAYATHRI - university of peradeniya (17-Aug-14, 12:16 pm)
பார்வை : 1100

மேலே