இசை - இளையராஜா
![](https://eluthu.com/images/loading.gif)
இன்னமும்
சிறுநகரப் பேருந்துகளில்
" வளையோசை
கலகலவென "
கேட்டுக் கொண்டுதானிருக்கிறது
இன்னமும்
சில தேநீர்க்கடைகளில்
" ராஜராஜ சோழன் நான் "
இசைந்து கொண்டுதானிருக்கிறது !
இன்னமும்
சிலரது நேயர்விருப்பமாக
" மலையோரம் வீசும் காத்து "
ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது !
இன்னமும்
சில அண்ணன்களின்
மிதிவண்டிகளில்
" செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல் "
கசிந்து கொண்டுதானிருக்கிறது !
இன்னமும்
சில பிற்பகல் பொழுதுகளில்
" பூங்காற்று திரும்புமா "
மனது வருடிக்கொண்டுதானிருக்கிறது !
இன்னமும்
ஊர்த்திருவிழாக்களில்
" பொதுவாக
எம்மனசு தங்கம் "
கர்ஜித்துக் கொண்டுதானிருக்கிறது !
இன்னமும்
நமது புத்தாண்டுகளை
" இளமை இதோ இதோ "
வரவேற்றுக் கொண்டுதானிருக்கிறது !
இன்னமும்
உறக்கம் வராத
நமது
பின்னிரவுப் பொழுதுகளில்
இளையராஜா
தாலாட்டுப் பாடிக்கொண்டுதானிருக்கிறார் !
========================
- குருச்சந்திரன்