காற்றில் மிதக்கும் இறகு
அந்திம நேரத்தில்
அந்த ஒற்றைப் பறவை
" அனாதையாய் "
அன்று உதிர்த்துவிட்டுப்போன
அதன் இறகு நான் ?
அதன் இயக்கத்திற்கென்
அஸ்தமனக்காலம் வரை
அயராதே உழைத்தேன்
ஆனாலும் ஏனோ ?
தனியிறகாய் ...
தரைநோக்கியின்று
தவித்தலுடன் நகர்கிறேன் ...
வான்வழி பயணிக்கையில்
வசந்த அழைப்புகள்
வந்து சேரவில்லை ...ஏதும் ?
வழிதப்பிய மேகக்கூட்டத்தின்
வரவேற்புகள்
வந்து சேர்ந்தன ... சிறு மகிழ்வாய் !
காற்றின் திசையில்
கரம் கோர்த்து
நட்பு பாராட்டி
நடை பயின்றேன் புதுமையாய் ..
விடியல் விட்டுசென்ற
மிச்சத்தின்
எச்சம் ...இன்னும்
சிலநொடிகள்தான் ...
வானவில்லின்
வற்றாத நிறம்கண்டு
வாட்டம் விலக்கி
அதன் நிறங்களை
அள்ளிப்பூச
ஆவல் கொண்டேன்...
வானத்து நிலவு
வரத்துவங்கும்
வாடாத பொழுதைக் காண
வியந்து நிற்கிறேன்
விழி திறந்து !
அழகு குறையாத
அதிசயத்தூரல் என்மேனி தொட
கொஞ்சம் நனைந்தேன்
நெஞ்சம் மறந்தேன்
வெட்கம் அடைந்தேன் ..
காற்றில் மிதக்கையில்
கவலை துறந்து
அதன் போக்கிலே
அலைபாய்கையில்
அளப்பரிய ஆனந்தம்
என்னுள்ளே ..இடைவிடாது
எதிர்திசைக் காற்றாய்
என்மேனியெங்கும் ..
சிறுசிறு பறவைக்கூட்டம்
சில்லெனப்பட்டு
சிறகுகள் நீட்டி
சில நொடிகள்யென் பாதைமாற்ற
சிறிது பயணித்தேன்
சிந்தை மறந்து அதன் வழியிலே ?
எந்தன் வழிப்பாதையெங்கும்
என்னைத் தொட்டுச் செல்லும்
எல்லையில்லா உறவுகள்
என் செவிகளில்
அழுத்தமாய் உரைத்தது
"அனாதையாய் இப்புவியில் "
யாருமில்லையென்று !
*** குமரேசன் கிருஷ்ணன் ***