குமரிக் கண்டம்--------அஹமது அலி------

நாவலன் தீவென்று நற்பெயர் கொண்டு
நாற்திசையும் நன்புகழ் வென்ற
குமரிக் கண்டம் காப்பதற்கு
காவலன் யாருமில்லையென்று
நீ காவு வாங்கினாயோ
ஏ....கடலே.!


ஏழுதெங்க நாடு ஏழுமதுரை நாடு
ஏழுமுன்பலை நாடு ஏழு பின்பலை நாடு
என்றெல்லாம் எம் தமிழர் ஆண்ட
நாற்பத்தொன்பது நாடுகளையும்
நாசகரமாய் வயிற்றில் போட்டாயே
உன் பசி அடங்கியதா சொல்
ஆழ்கடலே.!


பாய்ந்தோடி நிலமெங்கும்
பயிர் செய்த "பறுளி"யாற்றையும்
குன்றில் பிறந்து குவளயம் தவழ்ந்து
குலம் காத்த "குமரி"யாற்றையும்
நீ குடித்துப் போனாயே
நீலக் கடலே.!


நெடுவானம் தொட்டுப் பார்த்து
நெடுநாட்கள் உயர்ந்து நின்ற
"குமரிக்கொடு" மலையையும்
பனிக்கவசம் அணிந்து கொண்டு
நனிச் சிறப்பாய் எழுந்து நின்ற
"மணிமலை"யையும் மா அசுரனாய்
நீ தின்று ஏப்பம் விட்டாயே
நெடுங்கடலே.!


தெள்ளு தமிழ் வளர்த்த "தென்மதுரை"
கன்னித் தமிழ் வளர்த்த "கபாடபுரம்"
முத்துத் தமிழ் பேசி வந்த "முத்தூர்"-என
முத்தான முப்பெரும் நகரங்களை
கொத்தாக விழுங்கினாயே
கொடுங்கடலே.!


முதற் சங்கம் கண்ட தென்மதுரையையும்
இடைச் சங்கம் கண்ட கபாடபுரத்தையும்
கோரத் தாண்டவத்தில் சூறையாட
கடலோடு உறவே காலத்துக்கும் வேண்டாமென
காத தூரம் ஓடிவந்து மதுரை மாநகரில்
கடைச் சங்கம் கண்ட தமிழ்மகனை
நீ துரத்தியழிக்காமல் இரு
கத்துங் கடலே.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (20-Aug-14, 7:54 am)
பார்வை : 232

மேலே