கொல்லும் போர்க்களம்

யுத்தம் முடிந்தது! போரிலும் வெற்றி!
தலைக்கு மேலே கூட்டமாகக் காகங்கள்!
அச்சமூட்டுகிற கம்பள விரிப்பாய்ப் பிணங்கள்!
இறப்பைத் தழுவாத வீரர்கள் அரற்றுகிறார்கள்,
கதறுகிறார்கள்; மெலிதாக இறைஞ்சுகிறார்கள்!

இறந்து விடுவோம் என அறிந்தவர்கள்
பயத்திலும் நெஞ்சைத் துளைக்கும்
மிகுந்த வேதனையிலும் தேம்பித் தேம்பி
அழுகிறார்கள்! போரில் இறந்தவர்கள்
மாட்சிமைப்பட்டவர்களாம்!

அவர்களைப் பெருமைப்படுத்த
கைகளில் ஏந்திய பானக் கோப்பைகளையும்,
அதீத உணவுத் தட்டுகளையும் பெரிய அரங்கத்தில்
உயரத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்;
போரில் இறப்பதில் மாட்சிமை என்ன இருக்கிறது?

போரில் தோற்றவர்கள்,
எங்கே தவறு செய்தோம் என்ற
சிந்தனையில் சங்கிலியால் கட்டப்பட்டு,
மனக்குழப்பத்தில்
அமர்ந்திருக்க,

களைத்துப் போன குதிரைகள் கொட்டிலில்
சாப்பிடக்கூட முடியாமல் அயர்வுடன்
தண்ணீர் அருந்தவும் மனமின்றி
தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு
நிற்கின்றன!

ஆனாலும், மனிதன் மட்டும்
மனிதனுடன் சண்டையிட்டுப் போரிட
விடுதலை வேட்கை, பேராசை, மதம்,
காதல், மண்ணாசை என்று எப்பொழுதும்
காரணம் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறான்!

வெற்றி பெற்றவர்கள் பெற்ற வெற்றியைக்
காண உயிரோடிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியின்
திளைப்பில் இருந்தாலும், இத்தருணத்தில்,
உண்மையான வெற்றியாளர்கள் யார் தெரியுமா?
வானத்திலிருந்து இறங்கிவரும் காகங்களே!

Ref: Killing Fields by Marilyn Shepperson

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-14, 2:27 pm)
பார்வை : 122

மேலே