நீ வலிகளின் தலையா - வினோதன்
என் செயலகத்தில்
சென்றமர்ந்து - எனை
செயலற்றவனாக்கி
மகிழ்வில் திளைக்கிறாய்,
வலியால் துளைக்கிறாய் !
எந்த வேலையும்
செய்ய முடியாமல்
எல்லா வேளையும்
வேல் பாய்ச்சுகிறாய் ...
நீ கடந்து கடந்தே
கருகிய சிரத்தில் !
எக்கலையையும் ரசிக்க
விடாத நிலையெண்ணி
எகத்தாளம் செய்கிறாய்,
நீயிசைக்கும் தாளத்தால்
என் மேல்தளம் இடிகிறதே !
என்மேல் தளம் இடிக்கிறதே !
வெள்ளைப் பறவைகள்
வயிறு கண்டவுடன்
பறந்து போகிறாய்
தப்பிய மீனைக் கண்டபடி
பறக்கும் கழுகென !
அழையா விருந்தாடியாய்
என் அகமேறி வராதே...
வெட்டிவிட காலில்லையென்ற
கர்வத்தில் அலையாதே...
நண்பனின் தோள் கிடைத்தால்
நீ இடமாற்று ஏமாறுவாய் !
- வினோதன்