அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக்கவிதை

ஆனந்தம் தங்கும் அழகான இல்லத்தை
வானகமும் வையகமும் வாழ்த்திடும் - தேனருவி
தென்றலுடன் ஒன்றிணைய தேவராகம் கேட்டிடும்
இன்பமே பொங்கும் இனி .

அழகான இல்லறம் அன்பானக் கோயில்
தொழவே நிசந்தனில் தோன்றும் - வழங்கும்
பதினாறு நற்பேறு பாங்குடன் என்றும்
கதிதரும் வாழ்வினில் காண் .

சகலசெல்வ யோகமிக்க சௌபாக்ய வாழ்வு
சுகந்த மணம்கமழும் சொர்க்கம் - நிகரில்லா
அன்பிற் சிறப்புற்று ஆசைகள் விட்டொழிக்க
துன்பந் தொலையு முணர் .

கூட்டுக் குடும்பமெனும் கூட்டைக் கலைக்காமல்
வீட்டுக்குள் ஒன்றாய் வசித்திட - நாட்டினில்
பண்புடன் பாசமும் பல்கிப் பெருகிடும்
மண்ணில் தழைக்குமே மாண்பு .

விட்டுக்கொ டுப்போர்கள் வீணாவ தில்லையே
கிட்டிடும் வாழ்வும் கெடுவதில்லை - சிட்டே
அழகான வாழ்க்கையும் ஆனந்த மாகும்
பழகிடக் கைவரும் பார் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Aug-14, 11:57 pm)
பார்வை : 155

மேலே