கடைசியாய் ஒருமுறை

(எனது அண்ணனின் மைத்துனரும் எனது ஆருயிர் நண்பனுமாகிய திரு.சுரேஷ் அவர்கள், சாலை விபத்தொன்றின் பெருத்த வயிற்றினுள் இரையாகிப் போனார். 31 வயதான ஒற்றை மகனை இழந்து தவித்த தந்தையின் பேரழுகை, இன்னும் ஒலிக்கிறது என் செவிகளில். அரிதாய்த் தலைகாட்டும் என் கண்ணீர், அன்று மட்டும்.. ஆறாய்! என் மடிகிடத்திய, அவன் சடலத்திலிருந்து, நட்பையெலாம் உறிஞ்சிக்கொண்ட என் இதயமெங்கும், திட்டுத் திட்டாய் வேதனை! தாங்கவியலா வலிகளைத் தரையிறக்கும் என் முயற்சியின் முதற்படி எப்போதும் கவிதையே! கவிஞன், கருப்பொருளாய் மாறும்போது, உணர்தலும் வெளிப்படுத்துதலும் வசப்படுகிறது. சதாரண நிகழ்வாகிவிட்ட சாலைவிபத்துகள் ஒவ்வொன்றும், யாரோ சிலரின் வாழ்வினை, வேரறுத்துப்போடும் கசப்பான உண்மைதனை, கண்ணீரோடு கற்றுக்கொண்ட, உறவு நெஞ்சத்தின் பிரிவுத் துயரம் இது!)


தோற்றம்:09-09-1983

மறைவு:19-08-2014


'கடைசியாய் ஒருமுறை'.. என
எப்படிக் கேட்பதினி?

செல்ல மகளின்
பிஞ்சு இதழ்களால்
ஒரு முத்தத்தை!

கெட்டியான கோபத்திலும்
குட்டியாய்க் காதல் காட்டும்
கட்டியவளின் ஊடல்மொழிகளை!

அடங்கிய பசியிலும்
அம்மாவின் தவிப்பிற்காய்
அவளிடம் ஒரு தட்டுச்சோறை!

எனது தவறுகளுக்காய்
என்னை அதட்டத் தடுக்கும் பாசத்தால்
என் அன்னையிடம் புகாரளிக்கும்
தந்தையின் வார்த்தைகளை!

இதயங்களில் இளவரசனாக்கி
இருப்பதெலாம் எனக்கேயெனும்
இரு சகோதரிகளின்
அன்பு கலந்த வம்புகளை!

சில தியாகங்களுக்கும்
சில துரோகங்களுக்கும் மத்தியிலும்
உறவுகளின் வெவ்வேறு வடிவங்களாய்
என் வாழ்வின்
குறுக்கும் நெடுக்குமாய் ஓடித் திரிந்த
நண்பர்களின் அரட்டைகளை!

'கடைசியாய் ஒரு முறை'.. என

என் ஆத்மாவில் ஆழப் பதிந்துவிட்ட
இவ்வுறவுகளின் உலகினை
எப்படிக் கேட்பதினி?......

கடவுளிடம்!!!

எழுதியவர் : லீலாவதி பாபு (25-Aug-14, 12:46 am)
பார்வை : 724

மேலே